Greatech தொழில்நுட்ப நிறுவனத்தின் நான்காவது ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா

Admin

பத்து காவான் – பினாங்கு பத்து காவானில் Greatech தொழில்நுட்ப நிறுவனம் தனது புதிய உற்பத்தி ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மூன்றாவது உற்பத்தி ஆலையை துவங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

பத்து காவான் தொழிலியல் பூங்காவில் (BKIP) அமைந்துள்ள Greatech சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில், 500,000 சதுர அடியில் இந்நிறுவனத்தை விரிவுப்படுத்துகின்றது. இந்த விரிவாக்கத்தின் மூலம், Greatech நிறுவனத்தில் மொத்தம் 1,800 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். அவர்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் வடிவமைப்புப் பொறியாளர்கள் ஆவர்.

“சூரிய ஒளி, மின் இயக்கம், வாழ்வியல் மற்றும் குறைக்கடத்தி தொழில்களில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த அவர்களின் அறிவையும் வெளிப்பாட்டையும் மேம்படுத்த, உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்கும் இந்த விரிவாக்கம் துணைப்புரியும்,” என Greatech நிறுவனத்தின் நான்காவது ஆலையின் அடிக்கால் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வலுவான ‘Chip’ தேவைக்கு ஏற்ப, விநியோகச் சங்கிலியுடன் குறைக்கடத்தித் தொழிலுக்கு இதுவரை பெற்றிராத வாய்ப்புகளைத் திறந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், உலகளாவிய குறைக்கடத்தி தொழில்துறை 2030 ஆம் ஆண்டளவில் ஒரு டிரில்லியன் டாலர் வருவாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பேசுகையில் சாவ், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தொழில்துறையில் பினாங்கு மாநிலம் மலேசியாவிலே மின் மற்றும் மின்னணு (E&E) தயாரிப்புகளுக்கான மிக முக்கியமான உற்பத்தித் தளமாகத் திகழ்கிறது. மேலும், இது உலகளாவிய நிலையில் மிகவும் துடிப்பான மையங்களில் ஒன்றாகும்.

“2022 ஆம் ஆண்டில், பினாங்கு அதன் ஏற்றுமதி மதிப்பில் ஓர் ஆண்டுக்கு 27% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதே ஆண்டில் ரிம452 பில்லியன் ஏற்றுமதியும் எட்டியது, இது நாட்டின் மொத்த மதிப்பில் 29% ஆகும்.

“2022 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ரிம9.2 பில்லியன் பதிவு செய்யப்பட்ட தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி முதலீடுகளில் பினாங்கு முதலிடத்தில் உள்ளது,” என சாவ் விவரித்தார்.

“பினாங்கின் உள்நாட்டு நிறுவனங்கள், இம்மாநிலத்தில் M&E துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. M&E மற்றும் ஆட்டோமேஷன் களங்களில் மாநிலத்திற்கான விரிவான விநியோகச் சங்கிலியை உருவாக்குவதில் Greatech போன்ற உள்ளூர் நிறுவனங்களின் ஈடுபாடு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு என்ற நமது நிலையை நிலைநிறுத்தி, உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சி அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

பினாங்கில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றை மேம்படுத்த Greatech நிறுவனம் இன்று ரிம400,000 தொகையை வழங்கியுள்ளது.

Greatech நிறுவம், டெக் டோம் உடன் இணைந்து, டிஜிட்டல் கல்வியறிவு அதிகாரமளிக்கும் திட்டத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பினாங்கில் உள்ள எட்டு
(4 சீனப்பள்ளி, 2 தமிழ்ப்பள்ளி & 2 தேசியப்பள்ளி) பள்ளிகளைச் சேர்ந்த வசதிக் குறைந்த மாணவர்களுக்கு பயனளிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில், Greatech தனது நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கைகளுக்காக மொத்தம் ரிம7 மில்லியன் பங்களித்துள்ளது, பாராட்டக்குரியதாகும்.

“பினாங்கு மாநிலத்தின் நலனை உயர்த்துவதில் Greatech முயற்சி, அவர்களின் பாராட்டுத்தக்க பெருநிறுவனச் சாதனையை நிரூபித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் இதனை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்,” என சாவ் தமதுரையில் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, லீவ் சின் டோங், சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர்(MITI), சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங்; பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தீ சின்; டத்தோ லூ லீ லியான், (இன்வெஸ்ட்பினாங்கின் தலைமை நிர்வாக அதிகாரி); மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) துணை தலைமை நிர்வாக அதிகாரி
லிம் பீ வியன் மற்றும் Greatech Technology நிர்வாகக் குழுவினரும் அந்நிறுவனப் பணியாளர்களும் இடம் பெற்றனர்.