ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (LWHNPP), இந்து சமூக நலத்தையும் ஆலய நிர்வாகத்தின் நவீனமயமாக்கலையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்த வாரியத்தின் ஆதரவுடன் 50 பெறுநர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கான நிதியுதவி வழங்கப்பட்டது. அதேவேளையில், ஆலய நிர்வாகத்திற்கான டிஜிட்டல் மேலாண்மை அமைப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந் சிங் டியோ தொடங்கி வைத்தார். அவர், இந்த முன்முயற்சி மனிதாபிமான சேவைகளையும் சமூகத்திற்கான முக்கியமான டிஜிட்டல் மாற்றத்தையும் ஒருங்கிணைக்கும் சிறப்பான முன்னெடுப்பாகும் என்று குறிப்பிட்டார்.

பினாங்கு மாநிலத்தில் ஆலய நிர்வகிப்பதிலும் இந்து சமூகத்தின் நலனைக் கவனிப்பதிலும் இந்து அறப்பணி வாரியம் காட்டும் அர்ப்பணிப்பு ஒரு முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கது.
“இந்து அறப்பணி வாரியம் நிர்வாகத்தில் மட்டுமல்லாது, டயாலிசிஸ் சிகிச்சைக்கான நிதியுதவி மூலம் நோயாளிகளின் சுமையைக் குறைக்கவும் உதவுகிறது,” என்று அவர் நேற்று இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ண குஞ்ச் பாரு மந்திர் அருகே நடைபெற்ற டயாலிசிஸ் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் ஆலய மேலாண்மை அமைப்பின் டிஜிட்டல்மயமாக்கல் தொடக்க விழாவிலும் பேசும்போது தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜு சோமு; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர்; செனட்டரும் அறப்பணி வாரியத் துணைத் தலைவருமான ஆர்.ஏ லிங்கேஸ்வரன்; பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன்; பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ ஈ கீன்; பெராபிட் சட்டமன்ற உறுப்பினர் ஹெங் லீ லீ; குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் மற்றும் ஸ்ரீ குஞ்ச் பிஹாரி மந்திர் தலைவர் அனில் ஷர்மா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆலயம் மற்றும் இந்திய சமூகத்தின் விவகாரங்களை திறம்பட நிர்வகித்து, மாநிலத்தின் நல்லிணக்கத்தைப் பேணுவதில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் பினாங்கு மாநில அரசிற்கு, கோபிந் சிங் டியோ தனது பாராட்டைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், வழிபாட்டுத் தலங்களைச் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நியாயமான பேச்சுவார்த்தை அணுகுமுறையும் வெளிப்படையான தகவல்தொடர்பும் மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
“உதாரணமாக, கோலாலம்பூர், பத்ரகாளியம்மன் ஆலயப் பிரச்சனை, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பின் மூலம் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
ஆலயத்தில் டிஜிட்டல் அமைப்பின் தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்த கோபிந் சிங் டியோ, சமூக அமைப்புகளின் நிர்வாகத்தில் டிஜிட்டல்மயமாக்கலை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
“ஆலய நிர்வாகம் டிஜிட்டல் பயன்பாட்டின் மூலம் நிர்வகிப்பதன் வழி வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்; நிர்வாகத்திற்கும் பக்தர்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் எளிதாக்கும்,” என்றார்.
“டிஜிட்டல் திறன் பயிற்சி, ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் செயல்படுத்தல் மற்றும் தரவுப் பாதுகாப்பு உறுதி போன்ற துறைகளில் ஆதரவு வழங்க, டிஜிட்டல் அமைச்சு, மலேசிய டிஜிட்டல் பொருளாதார கார்பரேஷன் மற்றும் தொடர்புடைய முகமைகள் மூலம் முழுமையாகத் தயாராக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சமூக நலனை வலுப்படுத்தும் தனது தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கோபிந் சிங் டியோ அவர்கள் ஆலயத்திற்குக் கூடுதலாக ரிம10,000 மற்றும் 50 டயாலிசிஸ் நோயாளிகளுக்காக ரிம50,000 நிதியுதவியும் வழங்கினார்.
மேலும், ஆங்கில மொழி நினைவாற்றல் மற்றும் அகாடமி போட்டிகளில் தனது சிறப்பான சாதனைகள் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 14 வயது மாணவி புன்யமித்ரா அவரும் அங்கீகரிக்கப்பட்டார்.
ஒழுக்கமும் மனக்கூர்மையும் கொண்ட இளம் தலைமுறையினர் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் திறன் கொண்டவர்கள் என்பதற்கு அவரது இந்த சாதனை ஒரு சிறந்த சான்றாகும் என்று கோபிநொ அவர்கள் குறிப்பிட்டார்.
வசதி குறைந்த 50 டயாலிசிஸ் நோயாளிகளின் சிகிச்சைச் செலவுச் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த அறப்பணி வாரியம் அவர்களுக்கு RM1,000 ஒருமுறை நிதியுதவியாக வழங்கியதாக செனட்டரும் இந்து அறப்பணி வாரிய துணைத் தலைவருமான R. A. Lingeshwaran தெரிவித்தார்.
ஓர் அமர்வுக்கு ரிம150 முதல் ரிம200 வரை என மதிப்பிடப்படும் டயாலிசிஸ் சிகிச்சைச் செலவு, நோயாளிகளுக்கு பெரும் பொருளாதார சுமையாக இருப்பதாகவும், குறிப்பாக சிகிச்சை தொடர்பான பொருட்களின் விலை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் இது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
“ஒரு முன்னாள் மருத்துவமனை இயக்குநராக, டயாலிசிஸ் நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, 2023 முதல் தற்போது வரை மொத்தம் ரிம1.12 மில்லியன் ஒதுக்கீட்டில் பல்வேறு வகையான உதவிகள் மூலம் 1,251 பேர் பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையில், முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்களின் தலைமையின் கீழ், வாரியத்திற்கான வருடாந்திர ஒதுக்கீடுகள் முன்பு ரிம1.5 மில்லியனாக இருந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரிம2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், பினாங்கு மாநில அரசு நலத்திட்ட முயற்சிகளுக்கு தொடர்ந்து வலுவான ஆதரவளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், ஏறக்குறைய ரிம1.1 மில்லியன் மதிப்பிலான தண்ணீர்மலை கணேசா ஆலயத்தின் புனரமைப்பு, பாகான், மகா மாரியம்மன் மண்டபத்தை மேம்படுத்துதல் (ஏறக்குறைய ரிம700,000) மற்றும் ரிம400,000-க்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கோயிலின் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேரத்தில், ரிம2 மில்லியன் செலவில் செபராங் பிறை பகுதியில் முதல் மின்சுடலை வசதியை அமைக்கும் கட்டுமானத் திட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ரிம1.5 மில்லியன் நிதியை ஒதுக்கிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் மடானி அரசாங்கத்திற்கு மிக்கு நன்றி,” என்று அவர் தெரிவித்தார்