இளைஞர் மேம்பாட்டு திட்டங்களை வலுப்படுத்த புதிய வியூகம் – டேனியல்

Admin
75e1ee32 f638 4773 91ae 1ef10e1090ff

ஜார்ச்டவுன் – மாநிலத்தின் இளைஞர் நலத் திட்டங்களை மேலும் கட்டமைக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஒரு விரிவான இளைஞர் மேம்பாட்டு வியூக கட்டமைப்பை மாநில அரசு இறுதி செய்யும் என இன்று நடைபெற்ற மாநில சட்டமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர் டேனியல் கூய் ஸி சென் கூறுகையில், மாநிலம் தழுவிய நிலையில் இளைஞர் குழுக்கள், முகமைகள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான பங்குதாரர் கலந்துரையாடல் அமர்வுகள் மூலம், பினாங்கு இளைஞர் மேம்பாடு கார்ப்பரேசன் (PYDC) இந்தக் கட்டமைப்பை முன்னெடுத்துச் செல்கிறது, என்றார்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நடைமுறைக்கு உகந்த, போட்டித்தன்மை வாய்ந்த ஒரு செயல்திட்டத்தை உருவாக்கும் அதே வேளையில், வகுக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் ‘பினாங்கு 2030’ இலக்குக்கு ஏற்ப மாநில அரசு உறுதிசெய்ய விரும்புகிறது,” என்று அவர் மாநில சட்டமன்றத்தில் தனது தொகுப்புரையின் போது கூறினார்.

டேனியல் கூறுகையில், இளைஞர் திட்டங்களின் செயல்திறனை மதிப்பிட மாநில அரசு ‘Social Return on Investment’ (SROI) அணுகுமுறையைப் பயன்படுத்தி வருகிறது, என்றார்.

ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற பினாங்கு இளைஞர் தன்னார்வத் திட்டத்தின் கீழ் 14 சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், 260 தன்னார்வலர்கள் 16,767.4 மணிநேர சேவையை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசு இளைஞர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டு ரிம99,800-லிருந்து 2026ஆம் ஆண்டில் ரிம200,000- ஆக உயர்த்தியுள்ளது, என்றார்.

மாநில முழுவதும் 52 இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் 40 அமைப்புகளுக்கு இதுவரை ரிம100,400 ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மேலும் பல இளைஞர் அமைப்புகள் ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பளிக்கும் வகையில், இந்த நிதிக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் இன்று முதல் மே,31 வரை திறக்கப்படும்,” என்றார்.

மேலும், சுகாதாரப் பாதுகாப்பு குறித்து, 2017 முதல் 2021 வரை தேசிய புற்றுநோய் பதிவேட்டு அறிக்கையின் அடிப்படையில், மலேசியாவிலேயே மிக அதிக புற்றுநோய் பாதிப்பு விகிதங்களைக் கொண்ட மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும் என்று கூய் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டு காலகட்டத்தில் பினாங்கில் 13,044 புதிய புற்றுநோய் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அங்கு வசிப்பவர்களில் ஆறில் ஒருவருக்கு 75 வயதுக்கு முன்பே புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனைக் கையாள்வதற்காக, PeKa பி40 சுகாதாரப் பரிசோதனைத் திட்டத்தில் அதிகப் பங்கேற்பு இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தற்போது இத்திட்டத்தின் கீழ் பினாங்கில் 419,436 பயனாளிகள் இருப்பதாகவும், அத்துடன் மாநிலம் முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 263 செயல்படும் பொது மருத்துவ மையங்களும் 17 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் ஆதரவளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.