இளைஞர்களின் தலைமைத்துவத் திறனை வளர்க்கும் ‘இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்’

Admin
women

ஜார்ச்டவுன் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் ஏற்பாட்டில் ‘இளைஞர் மேம்பாட்டுத் திட்டம்’ ஜாலான் உத்தாமாவில் அமைந்துள்ள கோம்ப்ளெக்ஸ் மஸ்யாரகாட் பென்யாயாங் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

16 முதல் 30 வயதுக்குட்பட்ட 30 இளைஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைத் திறன்கள், தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் மனவலிமையை வளர்க்கும் நோக்கில் ஏற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆறு முக்கிய தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் இடம்பெற்றன. உடலியக்க சிகிச்சை நிபுணரும் நல்வாழ்வு பேச்சாளருமான திருமதி ஏஞ்சலின் பாலாஜி மனநலம் மற்றும் மனஅழுத்த மேலாண்மை குறித்து உரையாற்றினார்.

திருமதி ரூபனா தர்ஷினி இராமச்சந்திரன் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் வலுவான அடையாளம்; திருமதி கவிதா வீரமுத்து ஆரோக்கியமான உறவுகள் மற்றும் நண்பர்களின் அழுத்தத்தை சமாளிக்கும் வழிமுறைகள்; சமூக மேம்பாட்டு பேச்சாளர் திருமதி சாந்தி கலிதேவன் வாழ்க்கைத் திறன்கள்; இலக்கு நிர்ணயம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல், பாலிக் புலாவ் பாலிடெக்னிக் விரிவுரையாளர் திருமதி சோபனாம்பிகா சிவகுரு தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பு; குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி கோமதி இணையப் பாதுகாப்பு மற்றும் இணைய வழி பகிடிவதை குறித்து விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகுமார் தலைமை வகித்து தொடக்கவுரையாற்றினார்.

“இளம் பருவத்தினரை மேம்படுத்தும் திட்டங்கள் இன்றியமையாதவை, ஏனெனில் அவை அத்தியாவசியமான வாழ்க்கை திறன்களை வளர்த்து, சுயமரியாதையை அதிகரித்து, எதிர்கால தலைமைத்துவத்திற்கு அவர்களைத் தயார்படுத்துகின்றன. அவை உணர்ச்சிசார் நுண்ணறிவை வளர்த்து, சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்தி, நேர்மறையான சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கின்றன, என்றார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவிகளான பிரேமலா மற்றும் மோகனா ஆகியோருக்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலைய தலைவர் தனபாலன் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

women 2

மேலும், இந்நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பேச்சாளர்கள், தன்னார்வலர்கள், நிதியுதவியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் மாமன்றம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொண்டது.

இளைஞர்களின் அறிவு, தன்னம்பிக்கை, தலைமைத்துவத் திறன் மற்றும் நற்பண்புகளை வளர்த்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் உறுதியளித்துள்ளது.