மசாலா தேநீர் மணத்தில் உருவாக்கிய வாசனைத் திரவியத்திற்கு மாக் மாண்டின் தமிழ்ப்பள்ளிக்கு தங்க விருது

Admin
mak mandin 1

பட்டர்வொர்த் – நாம் அன்றாடம் அருந்தும் சாய் தேநீரில் பயன்படுத்தப்படும் நறுமண மசாலாப் பொருட்களைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிக்க முடியுமா என்ற கேள்வி, ஐந்தாம் ஆண்டு மாணவியான வந்தனா மெய்யழகனின் சிந்தனையில் உதித்தது.

வீட்டில் தனது தாயார் பாரம்பரிய மசாலா தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து வீசிய இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட சமையல் நறுமண பொருட்களின் இனிய மணம் வந்தனாவை வெகுவாகக் கவர்ந்தது.

மாக் மாண்டின் தமிழ்ப்பள்ளியின் மாணவியான வந்தனா, இயற்கை நறுமணத்தைப் பயன்படுத்தி வாசனைத் திரவியம் உருவாக்க முடியுமா என்ற ஆர்வத்தில் ஆய்வை மேற்கொண்டார்.
அந்த ஆர்வத்தின் பயனாக உருவானதே ‘சாய் ஆர்கானிக் பர்ஃப்யூம்’. வந்தனாவின் இந்தப் புதுமையான முயற்சிக்கு, அவருடன் இணைந்து பணியாற்றிய குழு உறுப்பினர்களான திவ்வியன் மகேந்திரன் மற்றும் ஹிரேன் ஜெய்சிங் ஆகியோரின் பங்களிப்பும் உறுதுணையாக அமைந்தது.

இவர்களின் புதுமையான கண்டுபிடிப்பு, 2026 போர்னியோ அனைத்துலக புத்தாக்க மற்றும் படைப்பாற்றல் போட்டியில் தங்க விருதை வென்று சாதனை படைத்தது.

அண்மையில் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் வந்தனா கூறியதாவது, “எனக்கு வாசனைத் திரவியங்கள் மீது அதிக ஆர்வம் உள்ளது. வீட்டில் பலவிதமான வாசனை திரவியம் உள்ளன. ஒரு நாள் என் அம்மா மசாலா தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, அதன் மசாலா மணம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த மணத்தை வாசனைத் திரவியமாக மாற்ற முடியுமா என்ற எண்ணமே இந்த கண்டுபிடிப்புக்கு ஊக்கமளித்தது,” என்றார்.

இந்த மூவரும் ‘Chai Organic Oil-Based Perfume STEM Project’ என்ற தலைப்பில் நான்கு நிமிட காணொளி விளக்கக்காட்சியை வழங்கி நடுவர்களைக் கவர்ந்தனர்.

மலேசிய இளம் விஞ்ஞானிகள் அமைப்பு (MYSO) மற்றும் மலேசியா சபா பல்கலைக்கழகம் (UMS) இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களிடமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட புத்தாக்கத் திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மே, 31 அன்று தங்களது திட்டத்தை சமர்ப்பித்த இந்த மாணவர்கள், ஜூலை,910 அன்று தங்க விருது வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

“எங்களின் முதல் STEM(அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) திட்டத்திலேயே தங்கப் பதக்கம் கிடைத்தது மிகவும் பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன்,” என்று வண்தனா கூறினார்.

“வாசனைகளின் உலகம் எப்போதும் என்னை ஈர்த்தது. என் அம்மா வாசனைத் திரவியம் பயன்படுத்தும் போதெல்லாம், இவ்வளவு சிறிய பாட்டிலுக்குள் இருந்து எப்படி இவ்வளவு அழகான மணம் வருகிறது என்று நான் ஆச்சரியப்படுவேன்,” என்று வந்தனா தெரிவித்தார்.

திவ்வியன் மகேந்திரன் கூறுகையில், “தங்க விருது கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தேநீரின் பாரம்பரிய மணத்தையும் அறிவியலையும் இணைத்திருப்பதே எங்கள் வாசனை திரவியத்தின் சிறப்பு,” என்றார்.

“தங்க விருது பெற்றதாக அறிவிக்கப்பட்டபோது மிகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருந்தது. இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டு மாதங்கள் உழைத்தோம்,”
ஹிரேன் ஜெய்சிங் கூறினார். அவர் பள்ளியின் ஹாக்கி அணியிலும் விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டியின் பங்கேற்புப் பணிகளில் மிகப்பெரிய சவால், சமையல் பொருட்கள் நறுமணங்களின் சரியான சமநிலையைப் பெறுவதாக இருந்ததாக வந்தனா தெரிவித்தார்.

“ஒரு நறுமணம் அதிகமாக இருந்தால் மற்றவற்றை மறைத்துவிடும். அதனால் பல விகிதங்களில் சோதனை செய்து சமநிலையை உருவாக்கினோம்.

எட்டு வகையான அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தினோம்,” என்றார்.

இறுதியில், வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்திய பிறகு வெவ்வேறு கட்டங்களில் வெளிப்படும் டாப் நோட் (Top Note), மிடில் நோட் (Middle Note), பேஸ் நோட் (Base Note) ஆகிய மூன்று வகையான நறுமணத்தை அவர்கள் உருவாக்கினர்.

தங்களது வெற்றிக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும், குறிப்பாக அறிவியல் ஆசிரியர் ஜகதீசன் மாரியப்பன், 42 அளித்த உறுதியான ஆதரவுதான் காரணம் என மூவரும் தெரிவித்தனர்.

வந்தனாவின் வாசனை திரவியம் மீதான ஆர்வமே இந்தத் திட்டத்திற்கான தொடக்கமாக இருந்ததாக ஜகதீசன் கூறினார்.

“ரோஜா, லாவெண்டர் போன்ற மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியம் சாதாரணமாகக் காணப்படுகின்றன. அதனால் வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அவர்கள் சாயைப் பயன்படுத்தலாம் என்று கூறியபோது முதலில் சிரிப்பாகவே தோன்றியது; ஏனெனில் சாய் என்பது ஒரு தேநீர்,” என்றார்.

மாணவர்களில் ஒருவரின் பெற்றோர் அழகுசாதனத் துறையில் இருப்பதால், வாசனைத் திரவியம் தயாரிப்பது தொடர்பான முக்கிய அறிவுரைகளை வழங்கியதாகவும், மற்ற பெற்றோர்களும் திட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

“எனது பங்கு தொழில்நுட்ப வழிகாட்டுதலாக மட்டுமே இருந்தது. விளக்கக்காட்சி ஸ்லைடுகள் தயாரித்தல், இணையத்தில் தகவல்களை ஆராய்தல் போன்றவற்றில் உதவினேன்,” என்றார்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி ஏற்கனவே பல STEM போட்டிகளிலும், ஹாக்கி, காற்பந்து, கூடைப்பந்து, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் போட்டி புதுமையுடன் சிறந்த டிஜிட்டல் விளக்கக்காட்சி திறனையும் கோரியதால் மிகவும் சவாலாக இருந்ததாக ஜகதீசன் தெரிவித்தார்.

“விளக்கக்காட்சியில் தகவல் வரைபடங்கள் (Infographics), அசைவூட்டப்பட்ட ‘ஸ்லைடுகள்’ மற்றும் குரல் பதிவு ஆகியவற்றைப் பயன்படுத்தினோம்.

மாணவர்கள் தாங்களே ஆங்கிலத்தில் தெளிவாக குரல் பதிவு செய்தனர். திட்டத்தின் அறிமுகத்தை வழங்க நான் சுருக்கமாக வீடியோவில் தோன்றினேன்,” என்றார்.

வருகின்ற ஆகஸ்ட்,23ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில், இந்த மூன்று மாணவர்களுடன் ஜகதீசனும் கலந்து கொண்டு தங்க விருதைப் பெறவுள்ளார்.

mak mandin 2

இதனுடன், பள்ளியின் ஹிர்ஷிகா ஆறுமுகம் வெள்ளி விருதையும், ஜெய்ரேஷ் கருணாகரன் மற்றும் அதர்வா குஷேந்திரன் ஆகியோர் ‘Honourable Mention’ விருதுகளையும் பெற்றனர்.

வந்தனா, திவ்வியன் மற்றும் ஹிரேன் ஆகியோரின் தங்கப் பதக்கப் பயணம் ஆய்வகத்தில் அல்ல, ஒரு சமையலறையில் தொடங்கியது. ஒரு கோப்பை மசாலா தேநீரின் இனிய நறுமணம், இன்று அனைத்துலக அளவில் பாராட்டைப் பெற்ற STEM புத்தாக்கமாக மலர்ந்துள்ளது.