எல் நினோவை எதிர்கொள்ள மாநில அரசு தீவிர தயார்நிலை – சுந்தராஜு

Admin
whatsapp image 2026 05 13 at 12.29.31

ஜார்ச்டவுன் – மாநில அரசாங்கம் எல் நினோ பருவநிலையை எதிர்கொள்வதற்கான தனது தயார்நிலையை தீவிரப்படுத்துகிறது.
பொதுமக்களை குறிப்பாக இலக்கு குழுவினரை பாதுகாப்பதற்காக, சுகாதாரம், பேரிடர் மீட்பு மற்றும் நிதி உதவி நடவடிக்கைகளை அரசு வகுத்துள்ளது.

சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஃபௌசி யூசோஃப் எழுப்பிய கேள்விக்கு, முதலமைச்சர் சார்பாகப் பதிலளித்த மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தராஜூ சோமு, ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலைக்குத் தயாராகுவதற்காக, மாநில அரசு மலேசிய வானிலை ஆய்வுத் துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறினார்.

எல் நினோ மற்றும் வெப்பமான காலநிலை நிலவரங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு தொடர்ந்து புதுப்பித்து வழங்குதல், மழையின்மை குறித்த முன் அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட முகமைகளுக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்பாக அறிவித்தல், மேலும் சமூக பன்முகக் காற்றுத் தர மாதிரியாக்க (CMAQ) அமைப்பைப் பயன்படுத்தி புகைமூட்ட முன் அறிவிப்புகளை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

பினாங்கு பேரிடர் மேலாண்மைப் பிரிவு, பேரிடர் மாதிரிப் பயிலரங்குகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டு, அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து புதிய தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன.

பொது சுகாதாரத் தயார்நிலை குறித்து பேசிய பிறை சட்டமன்ற உறுப்பினருமான சுந்தராஜூ மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வெப்ப அலை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

“இந்த வழிகாட்டுதலில், வெப்பநிலை அளவுகளின் அடிப்படையில் சுகாதார அபாய மேலாண்மை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள குழுக்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளின் அடிப்படையில், மாநில சுகாதாரத் துறை வெப்பம் தொடர்பான நோய்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், வெப்பமான பருவநிலையின் போது சமூகங்கள் தயாராகவும் பாதுகாப்பாகவும் இருக்க சுகாதார ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு மேலோங்க செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எல் நினோவால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வெளிக்களத் திட்டங்கள் மூலம், குறிப்பாக பி40 சமூகங்களைச் சேர்ந்த பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவுவதிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக சுந்தராஜூ கூறினார்.

இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரண நிதிகள் வழங்கப்படுகிறது. அவை தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் ‘இஹ்சான்’ உதவித் தொகை (BWI) திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு ரிம1,000 மற்றும் உயிரிழப்புகளுக்கு ரிம10,000 வழங்கப்படும்.

அதேவேளையில், பினாங்கு மாநில பேரிடர் நிதியம் கீழ், வீட்டுச் சேதத்தில் 20% தொகையை ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்சம் ரிம200 முதல் அதிகபட்சமாக ரிம10,000 வழங்கப்படும், என தெரிவித்தார்.

“இந்த நிதியுதவி, சமூகப் பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதையும் அவர்கள் மீண்டுவர ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று அவர் கூறினார்.