செபராங் பிறை பாதுகாப்பான, பசுமையான மற்றும் வாழத் தகுந்த நகரமாக மேம்படுத்த 10 முன்னுரிமைகள்

Admin
img 20261005 wa0054

 

செபராங் பிறை – பொதுமக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பான மற்றும் வாழத் தகுந்த நகரை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வகுத்துள்ளது.

இதில் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பசுமையான மற்றும் தூய்மையான நகர வளர்ச்சியை முன்னெடுத்தல், அத்துடன் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வலுவான, தாங்குதிறன் மிக்க மற்றும் வாழத் தகுந்த நகரமாக செபராங் பிறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட 10 முக்கிய முன்னுரிமைகள் இடம்பெற்றுள்ளன.

எம்.பி.எஸ்.பி மாநகர் மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமிட் கூறுகையில், 2027ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டம் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், டிஜிட்டல் மாற்றம், சிக்கனமான நிதி நிர்வாகம் மற்றும் சமூகத்தின் விரிவான பங்கேற்பு ஆகியவற்றின் மூலம் சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

“2027ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டம் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், எம்.பி.எஸ்.பி இன் சேவை வழங்கலை மேம்படுத்த பாலினப் பொறுப்பு மற்றும் பங்கேற்பு வரவு செலவுத் திட்டம் (GRPB) முறையும் பயன்படுத்தப்படுகிறது.

“இந்த அணுகுமுறை, கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள் மூலம் செபராங் பிறை மக்களின் கருத்துகள் மற்றும் தேவைகளையும் கருத்தில் கொள்கிறது,” என்று அவர் கூறினார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முழுமன்றக் கூட்டம் எண் 01/2026இல், 2027ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, எம்.பி.எஸ்.பி கடந்த மே 21ஆம் தேதி அனைத்து மன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் அமர்வை நடத்தியது.

அதுமட்டுமின்றி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கருத்துக்கணிப்பும் எம்.பி.எஸ்.பி இணையதளம் வழியாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதில் மொத்தம் 4,110 பேர் பங்கேற்றனர். அவர்களில் 2,644 பேர் ஆண்கள் (64.3 சதவீதம்), 1,466 பேர் பெண்கள் (35.7 சதவீதம்) ஆவர்.

“செபராங் பிறை மக்களிடமிருந்து மொத்தம் 400 பரிந்துரைகளும், மன்ற உறுப்பினர்களிடமிருந்து 47 பரிந்துரைகளும் எம்.பி.எஸ்.பி இன் சேவைகளை மேம்படுத்துவதற்காகப் பெறப்பட்டுள்ளன.

“இதன் மூலம், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பது நிதி அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதல்ல என்பதும், மக்கள் தங்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என்பதும் தெளிவாகிறது,” என்றார்.

‘சிறப்பான சேவை வழங்கலை முன்னெடுக்கும் டிஜிட்டல் மாற்றம்’ என்ற கருப்பொருளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டம் நான்கு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

அவை நிதி நிர்வாகச் சீர்திருத்தம், சமூக மூலதனத்தை வலுப்படுத்துதல், பொருளாதாரத் தாங்குதிறனை மேம்படுத்துதல், அத்துடன் உள்நாட்டு செயல்பாடுகள் மற்றும் விவேகமாக சேவை வழங்கலை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவையாகும்.

2027ஆம் ஆண்டில் எம்.பி.எஸ்.பி மொத்தம் ரிம461.08 மில்லியன் செலவினத்தை முன்மொழிந்துள்ளதாக டத்தோ படேருல் தெரிவித்தார்.

இதில் நிர்வாகச் செலவினங்களுக்காக ரிம423.02 மில்லியனும், மேம்பாட்டுக்காக ரிம23.20 மில்லியனும், மூலதனச் சொத்துகளுக்காக ரிம14.86 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், எம்.பி.எஸ்.பி இன் மதிப்பிடப்பட்ட வருவாய் ரிம425.08 மில்லியன் ஆகும். இதில் வரி வருவாய் ரிம282.06 மில்லியனும், வரியல்லா வருவாய் ரிம130.82 மில்லியனும், வரியல்லா பெறுமதிகள் ரிம12.20 மில்லியனும் அடங்கும்.

இந்த நிதித் தேவைகளை ஈடுகட்டும் வகையில், எம்.பி.எஸ்.பி ரிம118.2 மில்லியன் மதிப்பிலான பங்களிப்பு நிதியையும் பயன்படுத்தும். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மொத்தம் ரிம7.21 மில்லியன் ஒதுக்கீட்டையும் பெறவுள்ளது.

எம்.பி.எஸ்.பி தொடர்ந்து சிக்கனமான செலவின முறையைப் பின்பற்றுவதுடன், திறமையான பணிக் கலாச்சாரம், பொறுப்புணர்வு மற்றும் நேர்மையை மேலும் வலுப்படுத்தும்.

“அதேவேளையில், சேமிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, வருவாய் வசூலை அதிகரிப்பதன் மூலம் நிதிக் கசிவுகளுக்கான வாய்ப்புகளையும் கட்டுப்படுத்தும்,” என்றார்.

2027ஆம் ஆண்டுக்கான எம்.பி.எஸ்.பி வரவு செலவுத் திட்டம் தற்போதைய செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், நகரத்தின் தாங்குதிறனை வலுப்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், செபராங் பிறை தொடர்ந்து புத்திசாலித்தனமான, பசுமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாழ்வதற்கு ஏற்ற நகரமாக வளர்வதை உறுதி செய்யவும் ஒரு முக்கிய கருவியாக அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“தரவு, மக்களின் கருத்துகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த அணுகுமுறை, ஒதுக்கப்படும் ஒவ்வொரு நிதியும் மிகவும் திறமையான, விரைவான மற்றும் சமூகத்திற்கு நேரடியாகப் பயனளிக்கும் சேவை வழங்கலாக மாற்றப்படுவதை உறுதி செய்வதில் எம்.பி.எஸ்.பி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது,” என்றார்.