ஜார்ச்டவுன் – நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் (PHEB), பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு (KPWKM), தேசிய நல அறக்கட்டளை (YKN) ஆகியவை இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளன.
இதன் மூலம், பினாங்கில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டன.
பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங் கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு PHEB சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரிம5,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், KPWKM-இன் கீழ் செயல்படும் தேசிய நல அறக்கட்டளை (YKN) ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரிம500 வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தனது அலுவலகத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரிம1,000 வழங்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் துயரத்தை எந்தவொரு உதவியாலும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் நிதிச்சுமையைக் குறைப்பதற்கும் இந்த உதவிகள் ஓரளவு துணையாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறப்பு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், PHEB தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர், PHEB துணைத் தலைவரும் செனட்டருமான டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், YKN வடக்கு மண்டல இயக்குநர் சுல்கிப்லி யாக்கோப், ஆலயத் தலைவர்கள், அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, இந்து சமூகத்தைச் சேர்ந்த பி40 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் PHEB-க்கு லிம் ஹுய் யிங் பாராட்டுத் தெரிவித்தார்.
மருத்துவச் சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்ட நிதியுதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு (OKU) உதவுதல், பேரிடர்கள் மற்றும் எதிர்பாராத துயரச் சம்பவங்களால் பாதிக்கப்படும் தனிநபர் மற்றும் குடும்பங்களுக்கு அவசரகால உதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை PHEB மேற்கொண்டு வருவதாக அவர் பாராட்டினார்.
பொது மக்களின் சமூக நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, அரசு நிறுவனங்கள், நல அமைப்புகள் மற்றும் சமூகத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, நிகழ்வில் பேசிய PHEB தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அவர்களுக்கு அரசாங்கம் ஒருமுறை வழங்கும் நிதியுதவி (One-off) வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட இழப்பீடுகளைக் கோருவதற்குத் தேவையான இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில், தேசியப் பதிவுத் துறை (JPN) மற்றும் உள்துறை அமைச்சு (KDN) ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இந்தக் கோரிக்கை பினாங்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்லாமல், மேலும் 54 பேரின் குடும்பங்களுக்கும் பொருந்தும். இது தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழியவுள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.