ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில், 146 இந்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாணவர்களின் சாதனை அவர்களது குடும்பங்களுக்கும் பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்ததுடன், தேசிய கல்வி அரங்கில் பினாங்கின் நிலைப்பாட்டையும் மேலும் வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த வெற்றி எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பாராட்டு விழாவில், கௌரவிக்கப்பட்ட மாணவர்களில், 11 ‘A’ பெற்ற 10 மாணவர்கள், 10 ‘A’ பெற்ற ஒன்பது மாணவர்கள், 9 ‘A’ பெற்ற 51 மாணவர்கள், 8 ‘A’ பெற்ற 33 மாணவர்கள் மற்றும் 7 ‘A’ கிரேடு பெற்ற 42 மாணவர்கள் இடம்பெற்றனர்.
இந்தச் சாதனை, பல்வேறு பாடத் துறைகளில் மாணவர்கள் வெளிப்படுத்திய கல்விசார் சாதனையும் அவர்களது விடாமுயற்சியையும் பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.
“இன்று, 2025 எம்.பி.எம் தேர்வில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற 146 தலைசிறந்த மாணவர்களின் சாதனைகளை நாம் கொண்டாடுகிறோம்.

“இந்த வெற்றி மாணவர்களின் கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களின் வலுவான ஆதரவுடன் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் கூறினார்.
அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக, 11 ‘A’ பெற்ற மாணவர்களுக்கு தலா ரிம500; 10 ‘A’ பெற்ற மாணவர்களுக்கு தலா ரிம400; 9 ‘A’ பெற்ற மாணவர்களுக்கு தலா ரிம350; 8 ‘A’ பெற்ற மாணவர்களுக்கு தலா ரிம250, மற்றும் 7 ‘A’ பெற்ற மாணவர்களுக்கு தலா ரிம200 வழங்கப்பட்டது. இவ்விழாவில்மிக உயர்ந்த அங்கீகாரமாக, சிறந்த மாணவருக்கான பிரிவில் ரிம1,000 உதவிதொகையும் விருதும் வழங்கப்பட்டது.
மாநில முதலமைச்சர், பினாங்கு 2030 தொலைநோக்குப் பார்வையின் கீழ் கல்விக்கான மாநில அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், டிஜிட்டல் மற்றும் கல்வி மாற்றத்தில் எந்தவொரு மாணவரோ அல்லது பள்ளியோ பின்தங்கிவிடக் கூடாது என்பதிலும் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
பினாங்கு முழுவதும் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, மாநில தமிழ் பள்ளிகள் சிறப்புக் குழுவின் மூலம் ஆண்டுதோறும் ரிம2.42 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்நிதி ஒதுக்கீடு மூலம், பாதுகாப்பான மற்றும் உகந்த கற்றல் சூழல்களை உறுதி செய்வதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு ரிம768,901 விநியோகிக்கப்பட்டது
மாணவர்கள் ஆரம்பப் பள்ளிகளிலே STEM கல்வி மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கணினி ஆய்வகங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மேக்கர் ஆய்வகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, அடிப்படைப் பராமரிப்புக்கு அப்பாற்பட்ட ஆதரவு இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் சாவ் மேலும் கூறினார்.
மாணவர்கள் தங்கள் எஸ்.பி.எம் வெற்றியை உயர் சாதனைகளுக்கான ஒரு படிக்கல்லாகக் கருத வேண்டும் என்றும், தலைமைத்துவம், நேர்மை மற்றும் வலுவான ஒற்றுமை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர், இந்தத் திட்டத்திற்கான ஊக்கத்தொகை வழங்க கிட்டத்தட்ட ரிம50,000 செலவிடப்பட்டுள்ளதாகவும், சமூகத்தின் எதிர்காலத்திற்கான மிகவும் அர்த்தமுள்ள முதலீடு கல்விதான் என்றும் வலியுறுத்தினார்.
“இன்றுவரை, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நலன் மற்றும் கல்விக்காக ரிம1.29 மில்லியனைச் செலவிட்டுள்ளது. இதன் மூலம் பினாங்கில் உள்ள 1,712 இந்துக்கள் பயனடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில், வாரியம் முக்கிய மேம்பாடு மற்றும் சமூல நலத்திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது என்றும், இதில் கிட்டத்தட்ட ரிம1.29 மில்லியன் செலவில் தண்ணீர் மலை கணேசர் ஆலயத்தை மேம்படுத்துதல், சுமார் ரிம500,000 செலவில் குஞ்ச் பிஹாரி ஆலயத்தை மேம்படுத்துதல் மற்றும் பிரதான நிலப்பரப்பில் உள்ள அதன் ஒரே மண்டபத்தை சுமார் ரிம700,000 செலவில் புதுப்பித்தல் பணிகள் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்
இந்து அறப்பணி வாரியத்தின் ஆண்டு இயக்கச் செலவு மட்டுமே கிட்டத்தட்ட ரிம1.5 மில்லியனை எட்டுகிறது என்றும், மேம்பாடு கண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க எதிர்காலத்தில் அதன் வருடாந்திர ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் தங்கள் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று இராயர் நினைவூட்டினார்.
“நீங்கள் தனியாக வெற்றி பெற்றதாக ஒருபோதும் நினைக்காதீர்கள். இந்தத் தருணம் வரை உங்களை வழிநடத்திய தாய், தந்தை மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் கூறினார்.
வருடாந்திர நிகழ்ச்சியாக வழிநடத்தி வரும் இந்த அங்கீகாரத் திட்டம், மாணவர்களைச் சிறந்து விளங்கவும் பினாங்கின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கவும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
இந்த விழா மாணவர்களின் சாதனையைக் கொண்டாடும் எழுச்சியூட்டும் வகையில் நிறைவடைந்தது.
முன்னதாக, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரஜூ சோமு, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன், பினாங்கு மாநகர் கழகத்தின் மேயர் டத்தோ இராஜேந்திரன் மற்றும் பினாங்கு அறப்பணி வாரியத்தின் செயலாளர் டாக்டர் விசாந்தினி கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.