பூன்யாமித்ரா 300 பை (Pi) இலக்கங்களை மனனம் செய்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் பதிவு

Admin
fb img 1777645485068

ஜார்ச்டவுன் – பினாங்கைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கற்றலின் மீது உள்ள ஆர்வம் மூலம் அசாதாரண வெற்றியை அடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

பூன்யாமித்ரா 300 பை (Pi) இலக்கங்களை மனப்பாடம் செய்து துல்லியமாகச் சொல்லியதன் மூலம் அதிகாரப்பூர்வமாக மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

“இளம் வயது மாணவியாக இருந்து, அதிக எண்ணிக்கையிலான பை இலக்கங்களை மனப்பாடமாகச் சொல்லிய சாதனைக்காக இவர் அங்கீகாரம் பெற்றார்.”

சென் ஜோர்ஜ் இடைநிலைப் பள்ளியின் இரண்டாம் படிவ மாணவியான இவர், பிப்ரவரி 9ஆம் தேதி இப்பிரிவில் சாதனை படைத்த மலேசியாவின் முதல் நபராகத் திகழ்கிறார்.

இந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல என்று பூன்யாமித்ரா கூறினார். இது இரண்டு மாதங்கள் தொடர்ந்து செய்த பயிற்சியும் சுய ஒழுக்கமும் இந்த வெற்றியின் அம்சமாகும், என்றார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 இலக்கங்களை மனப்பாடம் செய்யும் இலக்கை நிர்ணயித்து, அதை அவர் கடைப்பிடித்து விடாமுயற்சியுடன் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செய்தார்.

ஆரம்பத்தில் இது சிரமமாக இருந்தாலும், ஒரு முறையை கையாண்ட பிறகு இலக்கங்களை நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் எளிதாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

அவரின் பயணம் பிற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. அதாவது தொடர்ந்து செய்யப்படும் சிறிய முயற்சிகள் காலப்போக்கில் பெரிய சாதனைகளாக மாறும் என்பதை பூன்யாமித்ரா முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலின் போது குறிப்பிட்டார்.

கணிதம் மற்றும் எண்களில் உள்ள அவரது ஆழ்ந்த ஆர்வமே இந்த சவாலை ஏற்க அவரை தூண்டியது என்று அவர் கூறினார்.

எண்களை கடினமாக பார்க்காமல், அதை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றிக் கொண்டார்.

அண்மையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் ஆலய நிர்வாகத்திற்கான டிஜிட்டல் மேலாண்மை அமைப்பு திறப்பு விழா நிகழ்ச்சியின் போது, அவரது சாதனைக்குப் பாராட்டாக ஒரு கணினியும் சான்றிதழும் இந்து அறப்பணி வாரியத்தால் வழங்கப்பட்டது.

அவரது தாயார் திலகம் பேசுகையில், 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற ‘Kids Got Talent Malaysia Season 9’ போட்டியில் “Memory Athlete” பிரிவில், இதே 300 பை இலக்கங்களை மனப்பாடம் செய்ததற்காக பூன்யாமித்ரா முன்னதாகவே வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது ஒரே பிள்ளையான இவர் நம் நாடு மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் வெற்றி வாகை சூடியதை எண்ணி அவர் தனது மகிழ்ச்சியை வெளிகொணர்ந்தார்.

மலேசியாவைத் தாண்டி, இந்த திறமையான இளம் மாணவி சர்வதேச அரங்கிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ‘America’s Got Talent Season 21’-இன் இணைய தேர்வில் பங்கேற்றதுடன், ‘ASEAN World Records Rising Starz Icon 2025’ போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

தன் சாதனை மற்ற மாணவர்களையும் தங்களுக்கு விருப்பமான துறைகளில் சவால் எதிர்கொள்ள குறிப்பாக கணிதம், நினைவாற்றல் திறன் மற்றும் கற்றல் துறைகளில் ஊக்குவிக்க முடியும் என்று பூன்யாமித்ரா நம்பிக்கை தெரிவித்தார்.