அங்காடி மற்றும் உணவக வியாபாரிகள் நிதியுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும் – டத்தோ ரோசாலி

Admin

செபராங் பிறை – உணவு வளாகங்கள் அல்லது தனியார் கடைகளின் வணிக உரிமையாளர்கள் பினாங்கு மக்கள் உதவித் திட்டம் 2.0 கீழ் ரிம 500 உதவியைப் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு செபராங் பிறை மாநகர் கழகத் தலைவர் மேயர் டத்தோ ரோசாலி முகமட் இன்று அறிவித்தார்.

இந்தச் சிறப்பு மானியத்திற்காக செபராங் பிறை முழுவதும் இருக்கும் உணவு வளாகங்கள் மற்றும் தனியார் உரிமம் பெற்ற அங்காடிக் கடைகளின் 1,153 வணிகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மேலும் அவர் இன்று முகநூல் நேரலை செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார்.

இருப்பினும், வணிக உரிமையாளர்கள் அல்லது தனியார் கடை உரிமையாளர்களால் செலுத்தும் உரிமக் கட்டணத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு
வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
மேலும் ஒதுக்கீட்டு வரம்பை மீறும் விண்ணப்பம் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

இந்த உதவித் திட்டத்தின் பயனாளிகள் அதாவது உரிமம் பெற்ற வணிகர்களாவர். எனவே, வளாகம் அல்லது காம்ப்ளக்ஸ் உரிமையாளர்கள் அங்காடி வியாபாரிகளின் தகவல்களை அவர்கள் சார்பாக சமர்பிக்க உதவ வேண்டும்.

எம்.பி.எஸ்.பி விரைவில் அறிவிக்கும் வலைத்தளம் மூலம் இணைய வாயிலாக
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை மே மாதம் 18-ஆம் தேதி முதல்
பதிவுச் செய்யலாம்.

எம்.பி.எஸ்.பி-யில் பதிவுச்செய்யப்பட்ட “டேக்கிங்” அந்தஸ்துள்ள 2,933 அங்காடி வியாபாரிகளின் மற்றொரு குழுவினர் 2018-இல் ஏற்கனவே உரிமங்கள் காலாவதியானவர்களும் ரிம 500 மானியம் பெற தகுதிப் பெற்றுள்ளனர் என்று ரோசாலி கூறினார். எம்.பி.எஸ்.பி கீழ் செயல்படும் 13 பகுதிகளில் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

மேலும் பேசிய மேயர், எம்.பி.எஸ்.பி இப்போது தனது 30 பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வருகின்றனர், மீதமுள்ள 70 விழுக்காட்டினர் நிபந்தனைக்கு உட்பட்ட இயக்க கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள் என்றார்.

எனவே, கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த மனித நடமாட்டத்தைக் குறைக்க செபராங் பிறை குடியிருப்பாளர்கள் ஆன்லைனில் எம்.பி.எஸ்.பி உடன் தேவையான பரிவர்த்தனைகளை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய இயல்பின் கீழ், 134 சேவை கவுண்டர்களும் இணையம் அல்லது சைபர் கவுண்டர்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது எம்.பி.எஸ்.பி-ல் 11 சேவை கவுண்டர்கள் செயல்படுகின்றன.

இதனிடையே, மார்ச் மாதம் 25-ஆம் நாள் அன்று ரிம 75 மில்லியன் மக்களுக்கான உதவித் திட்டத்திற்கு 2.0 பின்னர் மே மாதம் 6-ஆம் தேதி ரிம 76 மில்லியனுக்கான இரண்டாவது ஊக்குவிப்பு உதவித் திட்டத்தை அறிவித்த முதல்வர் சாவ் கொன் யாவ் மற்றும் மாநில அரசுக்கு ரோசாலி நன்றித் தெரிவித்தார்.