ஜார்ச்டவுன் – பண்டார் பாரு ஆயர் ஈத்தத்தையும் துன் டாக்டர் லிம் சோங் இயூ விரைவுச்சாலையையும் இணைக்கும் மாற்றுப் பாதைத் திட்டத்தின் (பிரிவு 2) கட்டுமானப் பணிகள், 2026 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 93.19 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் முழுமையாக 2027 ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் சாய்ரில் கீர் ஜொஹாரி கூறுகையில், பினாங்கு போக்குவரத்துப் பெருந்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள நான்கு முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் மூன்றாவது பினாங்கு இணைப்புப் பாதைத் திட்டம் ஆகியவற்றில், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் இதுவாகும், என்றார்.
இத்திட்டத்தில் இன்னும் நிறைவு செய்யப்பட வேண்டிய பணிகளில் சாலைத் தடுப்புச் சுவர்கள் (Parapet), நியூ ஜெர்சி வகை சாலைத் தடுப்புகள் (NJB), தெருவிளக்குகள், போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள், சாலைப் பெயர்ப்பலகைகள், தார் கலவை (Premix) மூலம் சாலைப் பரப்புதல் மற்றும் விரிவாக்க இணைப்புகள் (Expansion Joint) அமைத்தல் ஆகியவை அடங்கும்.
“கட்டுமானப் பணிகளுக்கான சோதனைகள் மற்றும் செயல்பாட்டுத் தகுதிச் சான்றளிப்பு நிறைவடைந்து, சாலைப் பாதுகாப்புத் தணிக்கை (RSA) ஒப்புதல் கிடைத்த பின்னரே இப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்,” என்றார்.
இன்று நடைபெற்ற 15ஆவது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணைக்கான இரண்டாவது கூட்டத்தில், கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் நிதி விபரங்கள் குறித்துப் பேசிய சாய்ரில், 2026 ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட பணிகளுக்கான கோரிக்கைத் தொகை ரிம695.98 மில்லியனாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இது தற்போதைய ஒப்பந்தத் தொகையான ரிம851.97 மில்லியனில் 81.69 விழுக்காடாகும்.
“இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட வடிவமைத்து நிர்மாணிக்கும் ஒப்பந்த முறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, நிலப் பரிமாற்றம் மூலம் கட்டம் கட்டமாகக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
“2024 டிசம்பர் 20ஆம் தேதி நிலவரப்படி, ரிம427.66 மில்லியன் மதிப்பிலான பணிகளுக்கான கொடுப்பனவாக 11.6183 ஏக்கர் அரசாங்க நிலம் ஒப்பந்ததாரருக்கு மாற்றப்பட்டுள்ளது.
“தற்போதைய ஒப்பந்தத் தொகையின் அடிப்படையில், இதுவரை செலுத்தப்பட வேண்டிய எஞ்சிய தொகை ரிம231.34 மில்லியனாகும்,” என்றார்.
இதற்கிடையில், தஞ்சோங் பூங்காவிலிருந்து தெலுக் பஹாங் வரை முன்மொழியப்பட்டுள்ள வடக்கு கடலோர இணை இருவழிச் சாலைத் திட்டத்தின் பிரிவு 1 குறித்துப் பேசிய சாய்ரில், தொழில்நுட்பப் பொருத்தம், உள்ளூர் சுற்றுச்சூழலின் உணர்திறன், குடியிருப்புப் பகுதிகளின் அடர்த்தி மற்றும் நில அரிப்பு அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திட்டத்தின் சில பகுதிகளுக்கான பாதைத் தடத்தை மாநில அரசு மறுஆய்வு செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், கூடுதல் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளையில், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சில பாதைத் தடங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
“பிரிவு 3 திட்டமான பெர்சியாரான் கெர்னியிலிருந்து துன் டாக்டர் லிம் சோங் இயூ விரைவுச்சாலை வரை இணைக்கும் நெடுஞ்சாலை வலையமைப்பை அமைப்பதற்கான முன்மொழிவு குறித்தும், அதன் எதிர்காலத் திசை மற்றும் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் மாநில அரசு மறுஆய்வு செய்து வருகிறது,” என்றார்.
இதனிடையே, மூன்றாவது பினாங்கு இணைப்புப் பாதை எனப்படும் பிரிவு 4 திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாய்ரில் தெரிவித்தார்.
முன்னதாக முன்மொழியப்பட்ட கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டத்திற்குப் பதிலாக, பாலம் அமைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் புதிய பாதைத் தடத்தை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
“பினாங்கு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தைக் கருத்தில் கொண்டும், கெர்னி பே மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், பாலம் அமைக்கும் வடிவமைப்பின் அடிப்படையில் புதிய பாதைத் தடத்தை ஆய்வு செய்ய மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“இந்தப் புதிய பாதைத் தடம் வடக்கு நோக்கி மாற்றியமைக்கப்படுவதால், துறைமுக விரிவாக்கத் திட்டத்துடன் அது ஒருங்கிணைந்து செயல்படுவதுடன், துறைமுகச் செயல்பாடுகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாது.
“தற்போது கருத்தியல் வடிவமைப்பு குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகள் பினாங்கு துறைமுக ஆணையத்திடம் (SPPP) சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக கருத்துகளும் பரிந்துரைகளும் பெறப்படும்,” என தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினருமான அவர் மேலும் தெரிவித்தார்.