இந்து அறப்பணி வாரியத் தலைவராக மீண்டும் பேராசிரியர் ப.இராமசாமி நியமனம்

ஜார்ச்டவுன் – ” மாநில அரசாங்கத்தின் சட்டப்பூர்வமான அமைப்பாகத் திகழும் இந்து அறப்பணி வாரியம் பினாங்கில் 2008-ஆம் ஆண்டு முதல் சிறந்த நிர்வாகத்தை வழங்குகிறது. இந்து அறப்பணி வாரியம் கட்டடங்கள், நிலம், இந்து மயானம் மற்றும் ஆலயங்களை சிறந்த முறையில் நிர்வகிக்கிறது, “என 2020-ஆம் ஆண்டுக்கான இந்து அறப்பணி வாரிய ஆணையர்களுக்கான நியமன நிகழ்வில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமி உட்பட
14 ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதத்தை மாநில முதல்வர் வழங்கினார். இந்து அறப்பணி வாரிய தலைவராக தொடர்ந்து பேராசிரியர் ப.இராமசாமியும், செயலாளராக திரு சுரேந்திரனும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்து அறப்பணி வாரியம் திறமையான நிர்வாகத்தால் இந்தியர்கள் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறு பினாங்கு மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் கேட்டுக் கொண்டார்.

மேலும், பினாங்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்து அறப்பணி வாரியத்திற்கு வழங்கும் ரிம 1.5 மில்லியன் மானியத்தைக் கொண்டு உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2010-ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்குவது
குறிப்பிடத்தக்கதாகும். கடந்த ஆண்டு (2019), 109 உயர்க்கல்வி மாணவர்களுக்கு ரிம345, 626.13 ஊக்கத்தொகையாக வழங்கியது பெருமைக்குரியது என்றார். மேலும், ஒவ்வொரு ஆண்டும் பல சமூகத்திட்டங்களும் இவ்வாரியத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

இம்முறை அஸ்பேன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அ.அணிலரசு புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.

” 14-ஆவது பொதுத் தேர்தலில் குறிப்பிடப்பட்டிருந்தபடி மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்து அறப்பணி வாரியம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார்.

இந்தியர்கள் அதிகமாக வாழும் கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்களில் விளக்கக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் அறப்பணி வாரியம் சட்டப்பூர்வமான அமைப்பாக உருமாற்றம் காணும் குறித்து வழக்கறிஞர்களுடன் சட்டத் திருத்தம் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.