இந்து சமயப் போதனை மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு வழிக்காட்டி

Admin
img 20251202 wa0072

செபராங் ஜெயா – பிறை, அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் இணைந்து பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான 2025 நன்னெறி மற்றும் இந்து சமயப் புதிர் போட்டியை, செபராங் ஜெயா கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஏற்று நடத்தியது. இப்போட்டி ஏழாவது ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
img 20251202 wa0068

இந்நிகழ்ச்சியில், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நன்னெறி மற்றும் இந்து சமயப் புதிர் போட்டியில் கலந்து கொண்டு, நன்னெறி, ஒழுக்கம் மற்றும் இந்து சமய அறிவு சார்ந்த கேள்விகளுக்குத் தங்கள் அறிவுத்திறனை வெளிப்படுத்தினர்.

புதிய தலைமுறையினர் நன்னெறி மற்றும் சமய அறிவில் புலமை பெற்றால், அவர்கள் சமூகத்தில் சிறந்த தலைவர்களாக உயர முடியும். இத்தகைய போட்டிகள் மாணவர்களிடையே தலைமைத்துவ பண்புகளை ஊக்குவிக்கும் என்றும், அதுவே அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என்றும் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தமதுரையில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் நிறைவில், அவர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

மேலும் தனது உரையின் போது, நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு சமய அறிவு குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது என டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப்பள்ளி சிறப்புக்குழு செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது என்றும், அதன் மூலம் கல்வி, விளையாட்டு, சமூகப்பணிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளிலும் ஆண்டுதோறும் இலவச இந்து சமய வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளின் ஒருங்கிணைப்புக்காக மட்டும் பிறை ஜாலான் பாருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஆண்டுதோறும் ரிம20,000 செலவிடுகிறது.

மேலும், மாதம் ஒன்றுக்கு சுமார் ரிம8,000 செலவில் சமய ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் சென்று வகுப்புகளை நடத்த நிதியுதவி வழங்கப்படுகிறது. கல்விக்காக ஆண்டுதோறும் மொத்தம் ஒரு இலட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது என்றும், இது ஆலயத்தின் முக்கிய சமூகப் பணிகளில் ஒன்றாகும் என்றும், ஆலயத் தலைவர் மேஜர் மு. சேகரன் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆலய சமயப் பிரிவுத் தலைவர் டத்தோ கரு. இராஜமாணிக்கம், தமிழ்ப்பள்ளிகளில் சமய வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற முன்முயற்சி திட்டத்திற்கு, முதன்மையாக ஊக்கம் வழங்கி, வகுப்புகள் தொடங்குவதற்கான ஆதரவை வழங்கியவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் என்பதையும் அவர் நினைவுக்கூர்ந்தார்.
மேலும், 2012 முதல் 2025 வரை, அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் கல்வி மற்றும் சமயப் பணிகளுக்காக மொத்தம் ரிம1.75 மில்லியன் செலவழித்துள்ளதாகவும், “மக்கள் பணம் மக்களுக்கே” என்பது தான் இந்த ஆலயத்தின் அடிப்படை கொள்கை எனவும் டத்தோ கரு. இராஜமாணிக்கம் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பிறை முனீஸ்வரர் ஆலய அறங்காவலர் டத்தோஸ்ரீ நா.கோபாலகிருஷ்ணன், செபராங் பிறை மாநகர் கழக உறுப்பினர் பொன்னுதுரை விக்டர், பினாங்கு இந்து தர்ம மாமன்ற தலைவர் ந. தனபாலன், மகளிர் பிரிவு தலைவி திருமதி இராஜலட்சுமி, மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் ரிஷி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் டத்தோ பெருமாளும் கலந்து கொண்டார்.

“இந்தப் போட்டி, என்பது பினாங்கு மாநில இளம் தலைமுறையின் சமய விழிப்புணர்வையும் பண்பாட்டு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் ஒரு சிறந்த முன்முயற்சி எனவும், இது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்து மதம் குறித்து அறிந்துகொள்ள ஒரு பயனுள்ள தளமாக செயல்படுகிறது என பினாங்கு மாநில இந்துதர்ம மாமன்றத் தலைவர் என். தனபாலன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.

இந்த போட்டியில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதல் பரிசு வென்றது. மேலும், வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.