இந்து சமயப் போதனை மாணவர்களின் நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டி

Admin
kuiz moral

பிறை – பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே இந்து சமய அறிவையும் நன்னெறிப் பண்புகளையும் வளர்க்கும் நோக்கில், 2026ஆம் ஆண்டுக்கான நன்னெறி மற்றும் இந்து சமயப் புதிர்ப் போட்டி, பிறை, ஜாலான் பாருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமும் மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் பினாங்கு அருள்நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்போட்டி, எட்டாவது ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநிலம் முழுவதிலுமிருந்து தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 224 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று, இந்து சமயக் கோட்பாடுகள், அறநெறி விழுமியங்கள் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம் குறித்த தங்களது அறிவை வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் வயதின் அடிப்படையில் இப்போட்டி இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது. முதல் பிரிவில் 7 முதல் 9 வயதுக்குட்பட்ட மாணவர்களும், இரண்டாம் பிரிவில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர். இதன் மூலம் மாணவர்கள் தங்களது இந்து சமய அறிவை வெளிப்படுத்துவதுடன், தன்னம்பிக்கை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை மற்றும் நன்னெறி சார்ந்த புரிதலையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

நன்னெறி மற்றும் சமய அறிவில் சிறந்து விளங்கும் இளம் தலைமுறையினர் எதிர்காலத்தில் சமூகத்தின் சிறந்த தலைவர்களாக உருவெடுக்க முடியும். இத்தகைய போட்டிகள் மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதுடன், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமையும் என்று பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தமது உரையில் தெரிவித்தார்.

மேலும், நாட்டில் பலரிடம் சமய அறிவு குறைவாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழு செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்ட அவர், கல்வி, விளையாட்டு, சமூகப்பணிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளிலும் ஆண்டுதோறும் இலவச இந்து சமய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளை ஒருங்கிணைப்பதற்காகப் பிறை, ஜாலான் பாருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஆண்டுதோறும் ரிம20,000 செலவிடுகிறது.

மேலும், சமய ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் நேரடியாகச் சென்று வகுப்புகளை நடத்துவதற்காக மாதந்தோறும் சுமார் ரிம8,000 நிதி ஒதுக்கப்படுவதாகவும், கல்விப் பணிகளுக்காக ஆண்டுதோறும் மொத்தம் ரிம100,000 செலவிடப்படுவதாகவும் ஆலயத் தலைவர் மேஜர் மு. சேகரன் தெரிவித்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது ஆலயத்தின் முக்கியமான சமூகப் பணிகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

2012ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை ஆலயம் கல்வி மற்றும் சமயப் பணிகளுக்காகக் கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “மக்கள் பணம் மக்களுக்கே” என்ற அடிப்படைக் கொள்கையின் கீழ் இத்தகைய சமூக நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்போட்டி பினாங்கு மாநில இளம் தலைமுறையினரிடையே சமய விழிப்புணர்வையும் பண்பாட்டு வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாகும். மேலும், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்து சமயம் குறித்த தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள இது பயனுள்ள தளமாக அமைந்துள்ளது என்று பினாங்கு மாநில இந்துதர்ம மாமன்றத் தலைவர் என்.தனபாலன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

மலேசிய இந்துதர்ம மாமன்றம் தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே இந்து சமயக் கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சமய ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளும் கற்பித்தல் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்கள் இந்து சமயம் குறித்த தங்களது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ளும் வகையில், மாமன்றத்தால் தயாரிக்கப்பட்ட சமயப் பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

இப்போட்டியில் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.