பாகான் ஜெர்மால் – வசதி குறைந்த மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து செயல்படுவது அவசியம் என்று முன்னாள் பினாங்கு முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் வலியுறுத்தினார்.
விமானம் சிறப்பாகப் பறப்பதற்கு இரண்டு இறக்கைகள் தேவைப்படுவதைப் போல, சமூகநலத் திட்டங்கள் வெற்றியடைவதற்கும் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகிய இரு தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம், என்றார்.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் சேவைக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 45ஆவது தீபாவளி பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தலா ரிம100 ரொக்க உதவி வழங்கிய ஒன் ஹோப் அறக்கட்டளை மற்றும் நல அமைப்பின் நிறுவனர், தலைவருமான டத்தோஸ்ரீ சுவா சுய் ஹாவுக்கு லிம் குவான் எங் நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டு, 500 குடும்பங்களுக்கு மொத்தம் ரிம150,000 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரிம200 மதிப்பிலான உணவுப் பொட்டலத்துடன் கூடுதலாக ரிம100 ரொக்க உதவியும் வழங்கப்பட்டது.
இனம், மதம் அல்லது சமூகப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், வசதி குறைந்த 500 குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் உதவிகள் வழங்கும் இச்சேவை கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அண்மையில் கூட்டரசு அரசாங்கம் தாக்கல் செய்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்புகளையும் லிம் குவான் எங் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் ஹுய் யிங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.என் இராயர் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன், ஓராண்டு அல்லது சில ஆண்டுகளுக்கு மட்டும் மேற்கொள்ளப்படும் சேவையாக இல்லாமல், தேவைப்படுவோருக்கு உதவும் இப்பணி கடந்த 45 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.
“எனது தந்தையார் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலமும் அவரது நண்பர்களும் இணைந்து தொடங்கிய தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் மரபு இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“சிலர் விளம்பர நோக்கத்திற்காகச் சில ஆண்டுகள் மட்டுமே அறப்பணிகளில் ஈடுபடலாம். ஆனால், எனது தந்தையார் தனது 75ஆவது வயது வரை இச்சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டார். இன்று நானும் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையிலும், இச்சேவை தொடர்ந்து நடைபெறுகிறது.

“சமூகத்திற்கு உதவுவது என்பது புகழுக்காகச் செய்யப்படும் செயலல்ல; அது நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்புமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம், டத்தோஸ்ரீ சுவா சுய் ஹாவ், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன், பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு நன்கொடையாளர்களும் கலந்துகொண்டனர்.