உள்ளூர் பிரச்சனைகளுக்குத் தீர்வாக #SungaiPinangInOneClick செயலி திகழ்கிறது – முதல்வர்

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் தலைமையில் ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ திட்டத்தின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தொகுதியான ஜெலுத்தோங் தலத்திற்கு இன்று வருகை மேற்கொண்டார்.

சுங்கை பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் முன்முயற்சியில், உள்ளூர் சமூகம் பிரச்சனைகள் குறித்த கருத்துக்கள் தெரிவிப்பதற்கும் மாநில அரசின் கீழ் செயல்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் நிதியுதவித் திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும் #SungaiPinangInOneClick எனப்படும் விவேக மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

பினாங்கு மாநில முதல்வர் இங்குள்ள சுங்கை பினாங்கு மாநில சட்டமன்ற தொகுதி தாமான் செரினா குடியிருப்புப் பகுதியின் மைதானத்தில் நடைபெற்ற ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ நிகழ்ச்சியின் போது மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இச்செயலியைத் தொடங்கி வைத்தார்.

“இந்த மொபைல் செயலி அறிமுகப்படுத்தும் பொருட்டு சுங்கை பினாங்கு சட்டமன்ற சேவை மையம் எடுத்து கொண்ட முயற்சியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

“இந்த #SungaiPinangInOneClick செயலியில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. பொது மக்களுக்கு சுங்கை பினாங்கு தொகுதிப் பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் சுங்கை பினாங்கு சட்டமன்ற சேவை மையத்தின் உதவியைப் பெறவும் துணைபுரிகிறது.

“கடந்த பொதுத் தேர்தலில் மக்களின் பிரதிநிதியாக சேவை வழங்கும் ஆணையைப் பெற்ற பிறகு, மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறோம்,” என்று பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

மேலும், கூடிய விரைவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் 15வது பொதுத் தேர்தலுடன் இணைந்து பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க, சுங்கை பினாங்கு குழுவினருக்கு இச்செயலி உதவும் என்று சாவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய சியூ கிம், #SungaiPinangInOneClick செயலியின் மூலம் உள்ளூர் மக்களின் பொது அரங்கம் பயன்படுத்துவதற்கு முன்பதிவு; வாக்காளர் பதிவேடு; புகுமுக வகுப்பு பதிவு மற்றும் அணிச்சல் (கேக்) தயாரிக்கும் வகுப்புகள், குடும்ப வன்முறை தொடர்பானப் புகார்கள் செய்வதற்கும் உதவும், என்றார்.

“SungaiPinangInOneClick செயலி உருவாக்குவதன் மூலம் சுங்கை பினாங்கில் வசிப்பவர்களுக்கும் சேவை மைய பணியாளர்களுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஆ தியோங்; ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

“தற்போது நாம் எண்டமிக் கட்டத்தில் நுழைந்த வேளையில் இந்த ‘ஜெலாஜா ❤️ பினாங்கு’ திட்டம் தக்க தருணத்தில் தொடங்கப்பட்டது.

“கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் கோவிட்-19 தாக்கத்தால் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளனர். எனவே, எண்டமிக் கட்டத்தில் நுழையும் வேளையில் அது மீட்சியை நோக்கிப் பயணிக்கத் துணைபுரிகிறது.

“எனவே, பொருளாதாரத் துறைகள் மீண்டும் இயல்பு நிலைக்குச் செயல்படத் தொடங்கியது சிறந்த துவக்கமாகக் கருதப்படுகிறது. பொருளாதாரத் துறைகள் மட்டுமின்றி கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூகநலத் திட்டங்களும் மீண்டும் செயல்பாடுக் காண்கிறது,” என்று மாநில முதல்வர் பல்நோக்கு விளையாட்டுத் தலத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

வடகிழக்கு மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் (PDTDTL) ரிம39,599.11 நிதிச் செலவில் கம்போங் ராவா பொது மக்கள் நலனுக்காக
இந்த பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. இத்திட்டம் ஜூலை,18 அன்று நிறைவடைந்தது.