எம்.பி.பி.பி சாலை போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகளின் புதிய நியமனம் சீரான போக்குவரத்துக்கு துணைப்புரியும்- முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) அமலாக்கத் துறையின் சாலை போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் புதிய நியமனம். இன்று துவங்கி சாலை போக்குவரத்து அதிகாரிகள் தீவுப்பகுதியில் குறிப்பாக ஜார்ச்டவுனில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமலாக்கத்தில் ஈடுப்படுவர். பினாங்கு மாநகர் கழகத்தின் சாலை போக்குவரத்து அதிகாரிகள் நியமன விழாவில் அணிவகுப்பை பார்வையிட்டப் பின்னர் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அவரின் தொகுப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
எம்.பி.பி.பி சாலை போக்குவரத்து அதிகாரிகளாக சுமார் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இம்மாநிலத்தில் சாலை போக்குவரத்து சீராக செயல்படுவதையும் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உறுதிச்செய்ய கடமைகளைச் செவ்வென ஆற்றுவர். இது மாநில அரசின் மற்றொரு புதிய முயற்சி என பாடாங் கோத்த சட்டமன்ற உறுப்பினருமான சாவ் தமதுரையில் தெளிவுப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், மலேசிய காவல்துறையினரும் இம்மாநிலத்தில் சாலை நெரிசலை குறைக்கத் தொடர்ந்து பணியில் ஈடுப்படுவர் என்றார். “இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஏற்ப தினமும் இங்கு வருகையளிப்பவர்களின் எண்ணிக்கையும் மற்றும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. எனவே, இப்பிரச்சனையை எதிர்கொள்ளவும் அதனை களையவும் தூரநோக்கு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

“எம்.பி.பி.பி சாலை போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் செக்‌ஷன் 3(4பி) சாலை போக்குவரத்து சட்டம் (சட்டம் 333) கீழ் சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இவ்வனைத்து அதிகாரிகளும் பொறுப்புடனும் கடமையுணர்ச்சியுடம் நேர்மையாக தமது கடமைகளை ஆற்ற வேண்டும்,” என நிலம், நில மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கோரிக்கை விடுத்தார். அமலாக்கப் பிரிவில் பணிப்புரியும் அனைவரும் மக்களின் நலனுக்கு முன்னிரிமை வழங்குவது மிக அவசியமாகும்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமது அசீசான் எம்.பி.பி.பி சாலை போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் 44 சாலை விதி மீறல்களுக்கு சமன்கள்(அபராத நோட்டீஸ்) வெளியிட முடியும் என தெளிவுப்படுத்தினார். அதாவது வாகனத்தை மஞ்ச நிற பெட்டியில் நிறுத்தாதது, இரட்டை கோட்டில் மற்றொரு வாகனத்தை முந்தி செல்லுதல், ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்க மறுத்தல், போக்குவரத்து அறிகுறிகள் மற்றும் சமிக்ஞை விளக்குகளை மீறுதல் மற்றும் இன்னும் பல கூற்றங்கள் இதில் அடங்கும்.

பினாங்கு மாநகர் கழகம் 2020-இல் இதுவரை 195,670 வெவ்வேறு சாலை குற்றங்களுக்காக அபராத நோட்டீஸ் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பினாங்கு மாநகர் கழகத்தில் விவேக கானொளி பகுப்பாய்வு அமைப்பு (sistem inteligent video analytics) மற்றும் விவேக செயல்பாட்டு மையம் (intelligent operation centre) மூலம் சாலை போக்குவரத்தைக் கண்காணிக்க இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளன.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அணிவகுப்பை பார்வையிட்டார்.