செபராங் ஜெயா – உலகளாவிய எண்ணெய் விநியோக நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க, செபராங் பிறை மாநகரம் கழகம் (எம்.பி.எஸ்.பி) அனைத்து துறைகளிலும் 10 சதவீத செலவுக் குறைப்பை அமல்படுத்தியுள்ளது.
ஊராட்சி, நகர் மற்றும் புறநகர் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லாய் கூறுகையில், 2026 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை எம்.பி.எஸ்.பி-இன் சேவைகளுக்கான பெட்ரோல் பயன்பாட்டு செலவு ரிம6 மில்லியன் என்ற ஆரம்ப ஒதுக்கீட்டை விட ரிம10 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய மோதல்களை உள்ளடக்கிய தற்போதைய புவியியல் அரசியல் சூழ்நிலை காரணமாக, எம்.பி.எஸ்.பி கூடுதலாக ரிம4 மில்லியன் செலவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இந்த ஆண்டிற்கான பெட்ரோல் செலவுக்கான ஆரம்ப ஒதுக்கீடு ரிம6 மில்லியன். ஆனால் எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக அது ரிம10 மில்லியன் வரை அதிகரித்துள்ளது.
“இதனால், இந்த எதிர்பாராத செலவுகளை சமாளிக்க அனைத்து துறைகளிலும் 10 சதவீத செலவுக் குறைப்பு நடவடிக்கையை எம்.பி.எஸ்.பி மேற்கொண்டுள்ளது,” என்று அவர், இங்கு உள்ள எம்.பி.எஸ்.பி மாநகர் மண்டபத்தில் நடைபெற்ற 2027 வரவு-செலவுத் திட்ட டவுன் ஹால் உரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமீட், மாநகரச் செயலாளர் மொஹமாட் இப்ராஹிம் மாட் நோர், மாநகர் மன்ற உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விளக்கமளித்த ஜேசன், இந்த ஆண்டில் சுமார் ரிம30 மில்லியன் செலவிடும் என கணிக்கப்பட்ட பொறியியல் துறையும் இந்த செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதேபோன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்ற துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப நிதி நிர்வாகத்தை சீரமைக்கும் முயற்சியாக இது அமைகிறது என்றும் தெரிவித்தார்.
ஆனால், மாநகர் சேவைகள் துறைக்கு வேறுபட்ட அணுகுமுறை தேவைப்படுவதாக அவர் கூறினார். குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை போன்ற தினசரி பணிகளுக்கான செலவுகள் அதிகமாக இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.
“உதாரணமாக, புலாவ் புருங் பகுதியில் குப்பை மேலாண்மைக்காக தினமும் லாரிகள் இயக்கப்பட வேண்டியுள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாடும், செயல்பாட்டு செலவுகளும் அதிகரிக்கின்றன,” என்றார்.
இதற்கிடையில், அவசரமற்ற சில திட்டங்கள் அடுத்த ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் ஜேசன் தெரிவித்தார்.
எண்ணெய் விலை உயர்வு தொடர்பான பிரச்சனை சமீபத்தில் பிரதமர் பினாங்கிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் போது முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“பிரதமர் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இவ்விஷயத்தில் கூட்டரசு அரசிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார்.
மேலும், 2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்படும் போது எண்ணெய் விலை உயர்வும் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.பி.எஸ்.பி மாநகர் கழக உறுப்பினர்கள், குறைந்த நிதி வளங்களுக்குள் மக்களின் தேவைகளை சமநிலைப்படுத்த சிறந்த தீர்வுகளை கண்டறிய ‘டவுன் ஹோல்’ அமர்வை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“நகராட்சி நிர்வாக திறனை நேரடியாக மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மேயர், மாநகர் கழக உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் எம்.பி.எஸ்.பி தொடர்ந்து படைப்பாற்றலுடனும் புதுமையுடனும் வளங்களை நிர்வகிக்கும் என நம்புகிறேன்.
“மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை பாதிக்காமல், சிக்கனமான செலவின முறைகளைப் பின்பற்றி நல்லாட்சியை வலுப்படுத்துவதே எங்கள் தற்போதைய முன்னுரிமை,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன் உரையாற்றிய படெருல் அமின், 2027ஆம் ஆண்டில் எம்.பி.எஸ்.பி “priority-based budgeting” என்ற அணுகுமுறையில் கவனம் செலுத்தும் என தெரிவித்தார்.
“பெரிய அளவிலான திட்டங்களை மட்டும் அல்லாமல், தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளுடன் (NGO) இணைந்து செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது உள்ளூர் சமூகத்தின் பொருளாதாரத்திற்கு அதிக பயன் தரும்,” என்றார்.

இதேவேளை, எம்.பி.எஸ்.பி மாநகர் மன்ற உறுப்பினர் பொன்னுதுரை, 2027ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய பல திட்டங்களை முன்மொழிந்தார்.
அவற்றில், மத்திய செபராங் பிறை (SPT) மாவட்டத்தின் தாமான் சாய் லெங் பகுதியில் சாலை மறுசீரமைப்பு, தாமான் இண்ராவாசி மற்றும் தாமான் சுப்ரீம் பகுதிகளில் காற்பந்து மைதானப் பராமரிப்பு மற்றும் பிறை பகுதியில் உள்ள மண்டபங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
“மேலும், தாமான் எமாஸ் மற்றும் தாமான் சாய் லெங் பகுதிகளில் இளைஞர்களுக்கான கூடைப்பந்து மைதானங்களை மேம்படுத்தவும் நான் பரிந்துரைத்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.