கல்வி முதலீடு சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு – முதல்வர்

Admin

ஜார்ஜ்டவுன் – “கல்வியின் முன்னேற்றத்திற்கு வழங்கப்படும் மானியத்தின் மூலம் மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க இயலும். கல்வி முதலீடு
சிறப்பான எதிர்காலத்திற்கான முதலீடு”, என மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசு
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படும் வருடாந்திர மானிமும் ரிம1.75மில்லியனிலிருந்து ரிம2.0 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், பாலர்பள்ளிக்கு (ரிம150,000) , தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதியம் ( ரிம150,000) , பஞ்சாப் பள்ளிகளுக்கு (ரிம90,000) என கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என
தமிழ்ப்பள்ளிகள், பஞ்சாப் பள்ளிகள் மற்றும் தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் அகம் மகிழத் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டு  சவாலை எதிர்நோக்கும்
வகையில் தமிழ்ப்பள்ளிகளில்
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் பாடத்திட்டம் மற்றும் பொது வசதிகள் அறிமுகப்படுத்த மாநில அரசு தொடர்ந்து மானியம் வழங்கி வருகிறது என சூளுரைத்தார்.

மாநில அரசு 11-வது முறையாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மானியம் வழங்கிய போதிலும் இந்த நற்செயலை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என முதல்வர் கூறினார்.

இந்நிகழ்வில் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நம்பிக்கை கூட்டணி அரசு  தமிழ் இடைநிலைப் பள்ளி அமைப்பதாக
அளித்த தேர்தல் வாக்குறுதியைக் கூடிய விரைவில் நிறைவேற்றும் என நம்பிக்கை கொள்வதாக மாநில இரண்டாம் துணை முதல்வர்  பேராசிரியர் ப.இராமசாமி தெரித்தார்.

மாநில அரசாங்கத்தின் கீழ் 20 பாலர் பள்ளிகள் இயங்குவதாகவும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு பாலர் பள்ளி கல்வியே அஸ்திவாரம் என மேலும் தெளிவுப்படுத்தினார்.

செய்தி: ரேவதி கோவிந்தராஜு
படம்: அமாட் அடில் பின் முகமது