சிறுத்தொழில் வியாபாரிகளுக்கு ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் – குமரேசன்

Admin

பினாங்கு மேம்பாட்டுக் கழகம்(பி.டி.சி) சிறுதொழில் வணிகர்களின் வியாபாரத்தை மேம்படுத்த அறிமுகப்படுத்திய ‘நம்பிக்கை கடனுதவித் திட்டம்’ வரவேற்கத்தக்கது.

இத்தகைய கடனுதவித் திட்டம் சிறுதொழில் வணிகர்களுக்கு பேருதவியாக திகழ்கிறது. இருப்பினும், பினாங்கு மாநில நம்பிக்கைக் கடனுதவித் திட்டத்தில் குறிப்பாக சீனர்கள் மற்றும் இந்தியர்களின் ஈடுபாடு
மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இத்திட்டத்தில் சீனர்கள் 9.3 விழுக்காடும் இந்தியர்கள் 4.1 விழுக்காடு மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

பி.டி.சி இத்திட்டம் பற்றிய தகவல்கள் அதன் இலக்கு குழுவினருக்கு சென்றடையும் வகையில் அதனை விளம்பரம் செய்ய
முன்வர வேண்டும்.

மேலும், பி.டி.சி கழகம் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையங்கள், அரசு சாரா இயக்கங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களுடன் கைக்கோர்த்து இத்திட்டத்தை விளம்பரப்படுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, இக்கடனுதவித் திட்டம் வேலை இழந்தவர்களுக்கும், தொழில் தொடங்க விரும்பும் வேலையற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் 14ஆவது சட்டமன்ற கூட்டத்தொடரின் தொகுப்புரையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புவோர் ஆறு மாதங்களுக்கும் மேலாக வணிகம் செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இடம்பெறுகிறது.

இந்நிபந்தனையை இலக்கு குழுவிற்கு விலக்கு அளிக்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, மாநில அரசு விவசாயத்தில் ஈடுபட விரும்பும் தொழில்முனைவோர் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் செயல்படுத்தவும் அதிகமான வருமானம் ஈட்டவும் விவசாய மற்றும் கால்நடை நடவடிக்கைகளுக்கான நிலத்தை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுமாறு கோரிக்கை விடுத்தார்.

சிறு அளவிலான விவசாயம் செய்யும் விவசாயிகள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கும் குறைவான காலவரையறைக்கு மட்டுமே நிலத்தை குத்தகைக்கு பெறுவதாக விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர் இப்பிரச்சனையை சட்டமன்ற கூட்டத்தொடரில் முன்வைத்தார்.

மேலும், பினாங்கு மாநிலத்தில்
கடந்த ஜனவரி முதல் ஜூன் 2020 வரை
அதன் நான்கு மாவட்டங்களிலும் பல்வேறு போதைப்பொருள் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 35 வயதுக்கும் குறைவான 2,714 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறையின் புள்ளிவிபரங்கள் சித்தரிப்பது கவலை அளிப்பதாக குமரேசன் தெரிவித்தார்.

எனவே, இளைஞர்களிடையே இப்பிரச்சனையைக் களைய மாநில அரசு தன்னார்வ இயக்கங்கள், பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம், ‘,’ ஆகிய இயக்கங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பட்டறைகள் மற்றும் திட்டங்களை வகுக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

பினாங்கு கோவிட் -19 தொற்றுநோய் விளைவாக, 2020 முதல் காலாண்டில் பினாங்கில் வேலையின்மை விகிதம் 2.1% ஆக இருந்தது, இரண்டாவது காலாண்டில் 4.4% ஆக அதிகரித்துள்ளது.

பினாங்கு மனிதவள துறையின் அறிக்கையின் அடிப்படையில், பினாங்கில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நிரந்தர அல்லது தன்னார்வ முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 5,443 பேர் என அறிவித்துள்ளது. இந்த பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு ‘கேட் சென்டர்’, பி.ஒய்.டி.சி, மற்றும் சொக்ஸோ போன்ற முகவர்கள் மூலம் மாநில அரசு அதன் இலக்கு குழுக்களுக்கு ஏற்ப உதவிகளை விரிவுப்படுத்த வேண்டும்.

வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி, நெறியுரை மற்றும் நிதி ஊக்கத்தொகை மூலம் நல்ஆதரவு மற்றும் உதவி செய்ய முடியும் என குமரேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு மாநிலம் 2030-குள் 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் வாங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் வரவேற்றார். பத்து உபான் சட்டமன்ற தொகுதியிலும் இவ்வீடமைப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார். மேலும், அதிகமான வங்கி கடன் நிராகரிப்பு காரணமாக வாடகைக்கு வீடு வாங்கும் திட்டத்தின் மூலம் பி40 சார்ந்த குடும்பங்கள் சுமையின்றி சொந்த வீடுகள் பெற்றிருப்பதை உறுதிப்படுத்த முடியும் என சூளுரைத்தார்.

கோவிட் -19 தாக்கத்தினால் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் பினாங்கு வாழ் மக்களின் நலனுக்காக தரமான 2021 வரவு செலவு திட்டம் சமர்ப்பித்த மாநில அரசிற்கு பாராட்டுகளை குமரேசன் தெரிவித்தார்.