ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் குறைந்த வருமானம் கொண்ட பி40 குடும்பங்களைச் சேர்ந்த 38 மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில், ‘சிஸ்வா பிறை’ திட்டத்தின் கீழ் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, செப்டம்பர் 18ஆம் தேதி கொம்தாரில் நடைபெற்ற மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இந்த ஆண்டுக்கான திட்டத்தின் இறுதிக்கட்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் மூலம், டிப்ளோமா, பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்வியைத் தொடரும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை பயனடைந்துள்ளனர்.

ஒரு மடிக்கணினியின் விலை சுமார் ரிம2,000 என்பதால், இத்திட்டம் பி40 குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.
“இத்திட்டத்தின் கீழ் உதவி உண்மையில் தேவைப்படும் மாணவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, விண்ணப்பதாரர்கள் கடுமையான தேர்வு முறைக்கு உட்படுத்தப்படுவதாகவும், இனம் பாராமல் தகுதியுடைய மாணவர்களுக்கு உதவி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

“மாணவர்கள் தங்களது கல்வியில் முழுக் கவனம் செலுத்தி, கல்வியைச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாகப் பயன்படுத்த வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய 38 மாணவர்களுக்கு தலா சுமார் ரிம2,000 மதிப்பிலான புதிய மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரிம80,000 என தெரிவிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல், மடிக்கணினிகள் மற்றும் நிதியுதவி மூலம் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக சுமார் ரிம300,000 தனிப்பட்ட முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்படவில்லை என்றும், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் பெருநிறுவனத் துறையில் பணியாற்றிய காலத்தில் சேமித்த தனிப்பட்ட சேமிப்பிலிருந்தே இதற்கான நிதி வழங்கப்படுவதாகவும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.
“குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எனது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்துகொண்டுள்ளேன். எனவே, கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
“மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளும் நிதியுதவியும் வெறும் சாதனங்கள் அல்லது பண உதவி மட்டுமல்ல. அவை அறிவு, வாய்ப்பு, முன்னேற்றம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை உருவாக்கும் ஆதரவாகும்,” என்றார்.
மேலும், மாணவர்கள் பெற்றுக்கொண்ட உதவியை முழுமையாகப் பயன்படுத்தி, கல்வியில் முன்னேறுவதுடன் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு எதிர்கால இலக்குகளை அடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்காலத்தில் வெற்றி பெற்ற பின்னர், மாணவர்கள் மற்றவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி, அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் ‘சிஸ்வா பிறை’ திட்டம், மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
பொருளாதார அல்லது குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு மாணவருக்கும் கற்றல், வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
“எந்த மாணவரும் பின்தங்காமல், ஒவ்வொரு இளைஞரும் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறுவதை உறுதி செய்வோம். கல்வியில் முதலீடு செய்வது நமது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்,” என்றார்.