செபராங் பிறையில் ரிம1 பில்லியனுக்கும் மேற்பட்ட 30 மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்பாடுக் காணும்

Admin
whatsapp image 2025 11 20 at 3.12.56 pm

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு ரிம1 பில்லியனுக்கும் அதிகமான 30 திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்துவதன் மூலம் செபராங் பிறையின் வளர்ச்சியை புறக்கணிக்கவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது.

தெற்கு செபராங் பிறை மாவட்டத்தில் (SPS), 13வது மலேசிய திட்டத்தின் RP1 பிரிவின் கீழ் மொத்தம் 30 விரிவாக்கத் திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான மொத்த செலவுத்தொகை ரிம1,065,757,811.00 ஆகும்.

“தெற்கு செபராங் பிறையை, குறிப்பாக புக்கிட் தம்பூனை மாநில அரசு மறக்கவில்லை,” என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாவது தவனையின் இரண்டாவது கூட்டத்தில் தனது தொகுப்புரையை வழங்கும் போது இவ்வாறு கூறினார்.

இத்திட்டங்கள் செயல்பாடுக் காண்பதை உறுதிச் செய்ய 2026 ஆம் ஆண்டிற்கான உச்சவரம்பு செலவாக ரிம124,998,500.00 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள திட்டச் செலவு ரிம506,431,744.00 திட்டமிடப்பட்ட அட்டவணை மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகளின்படி தொடர்ந்து வழங்கப்படும், என்றார்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் 1.15 கி.மீ நீளமுள்ள சாலையை இரு வழிச்சாலையையும், இரண்டு (2) வழித்தடத்திலிருந்து R5 தரத்துடன் நான்கு (4) வழித்தடமாக மேம்படுத்துதல்; நதியை மேம்படுத்துதல்; வடிகால் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கட்டுதல் போன்றவை அடங்கும் என கூறி புக்கிட் தம்பூன் புறக்கணிக்கப்படவில்லை என்று அதன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் அய்க் கேள்விக்கு இவ்வாறு பதலளித்தார்.

“மேலும், தெற்கு செபராங் பிறை (SPS) மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பினாங்கு மேம்பாட்டுக் கழகம் (பி.டி.சி) முக்கியப் பங்காற்றுகிறது. பண்டார் காசியா பள்ளி, பத்து காவான் பொதுச் சந்தை, டதாரான் உசாஹவன், GBS@பண்டார் காசியா, பத்து காவான் பாலம், பண்டார் காசியா தொழில்நுட்ப பூங்கா (BCTP) கட்டம் 1, ⁠வால்டோர் சாலை நீட்டிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் போன்றவை பி.டி.சி செயல்படுத்தப்பட்டது, செயல்பாடுக் காண்கிறது மற்றும் திட்டமிட்டுள்ள திட்டங்களில் சேர்க்கப்படுகின்றன,” என்று பாடாங் கோத்தா மாநில சட்டமன்ற உறுப்பினருமான சாவ் தெரிவித்தார்.

பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBA) எஸ்.பி.எஸ். மாவட்டத்தில் மேற்கொள்ளும் முக்கிய திட்டங்களில் புக்கிட் பஞ்சோர் DAF (Dissolved Air Flotation) நீர் சுத்திகரிப்பு நிலையம் (WTP 10); சுங்கை கிரியானில் 6.4 MLD கொள்ளளவுடைய புதிய கொம்பேக் WTP, பெர்மாத்தாங் திங்கியில் புதிய பூஸ்டர் பம்ப் நிலையம் மற்றும் 50 MLD சுங்கை கிரியான் WTP-யின் வடிவமைப்பு கட்டமைப்பு ஆகியவை அடங்கும். இத்திட்டங்களுக்கான மொத்த செலவு ரிம557.3 மில்லியன் என அறியப்படுகிறது.
பினாங்கு மற்றும் பேராக் இடையிலான நீர் ஒத்துழைப்பு முன்முயற்சியின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டத்திற்காக பினாங்கு மாநில அரசு, பேராக் மாநில சொத்துகள் மற்றும் முதலீட்டுக் கழகம் (PKNPk) – கமுடா கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கையெழுத்திட்டது.

இத்திட்டம், பினாங்கு மாநிலத்தின் நீர் தேவையை எதிர்காலத்திலும் நிலைத்தன்மையுடன் பூர்த்தி செய்யும் நோக்கில், மூலநீர் ஆதாரங்களை பலப்படுத்தும் முயற்சியாக அமைகிறது என முதலமைச்சர் தொகுப்புரையில் தெரிவித்தார்.