ஜாலான் ஹிட்மாட் மற்றும் ஜாலான் துன் டாக்டர். அவாங் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது

Admin

பத்து உபான் – பள்ளி நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜாலான் ஹிட்மாட் சாலையின் ஒரு பகுதி மற்றும் ஜாலான் துன் டாக்டர் அவாங் சாலை ஆகிய இவ்விரு சாலைகளும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் நேற்று (13/7/2020) முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த ஒரு வழி போக்குவரத்து மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொடக்கமாக மூன்று மாத காலத்திற்குச் செயல்படுத்தப்படும் என்று பத்து உபாம் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்.

பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மின் சின் சீனப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் போக்குவரத்து நிலைமை குறித்து பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளது. இதில் ஜாலான் கிட்மாட், ஜாலான் துன் டாக்டர். அவாங் சாலை இணைப்பு மற்றும் பெர்சியரன் புக்கிட் ஜம்புல் 1 சாலை ஆகிய பாதைகளில் நிலவும் வாகன நெரிசல் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

“பள்ளியின் முன்புறத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் மின் சின் சீனப்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உடனான கலந்துரையாடலின் பலனாக, பினாங்கு மாநகர் கழகம் ஜாலான் கிட்மாட், ஜாலான் துன் டாக்டர். அவாங்கஆகிய பாதைகளை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது.

“இந்த ஒரு வழி பாதை ‘பப்லிக்’ வங்கியின் மூற்சந்தியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மின் சின் சீனப்பள்ளி சாலை வரை இடம்பெறும், ” என்று பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் அச்சாலைக்கு சென்று போக்குவரத்து நிலவரங்களைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இந்த விவரங்களை குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் மற்றும் அக்கழக பொது போக்குவரத்து பொறியாளர் ஜைனுடின் மொஹமட் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் மின் சின் சீனப்பள்ளி நிர்வாகத்திடம் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களிடையே ‘அன்பான பெற்றோர்’ குழுவை அமைத்து, போக்குவரத்து அதிகாரி (warden)நியமனம் குறித்து பினாங்கு மாநகர் கழகத்திடம் பரிசீலிக்க பரிந்துரைத்தார்.

“தேர்ந்தெடுக்கப்படும் போக்குவரத்து அதிகாரி பினாங்கு மாநகர் கழகத்திடம் சிறு ஊக்கத்தொகையைப் பெறுவர் மற்றும் பள்ளி பகுதிகளில் நெரிசலைக் கட்டுப்படுத்த மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) பயிற்சி அளிக்கும்.அதே நேரத்தில், பொதுமக்கள் அச்சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை பின்பற்றி பயணிக்க வேண்டும்”, என குமரேசன் அறிவுறுத்தினார்.