டிசம்பர்,21 முதல் சென்னை-பினாங்கு நேரடி விமானச் சேவை தொடக்கம்

Admin
whatsapp image 2024 11 25 at 12.44.23

ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு டிசம்பர்,21 முதல், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கும் பினாங்கு மாநிலத்திற்கும் இடையிலான நேரடி விமானச் சேவை இணைப்பு தொடக்க விழாக் காண்கிறது. எனவே, இண்டிகோ விமானம் இந்த இரண்டு கலாச்சார புகழ்ப்பெற்ற இடங்களை இணைக்கும் புதிய விமானச் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

img 20241125 wa0101
முதல் விமானம், IndiGo 6E1045, சென்னையில் இருந்து அதிகாலை 2:15 (சென்னை நேரம்) புறப்பட்டு, காலை 8:30 (உள்ளூர் மலேசிய நேரம்) பினாங்கை வந்தடையும். பினாங்கில் இருந்து திரும்பும் விமானம் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

இந்தப் புதிய இணைப்பு இந்தியப் பயணிகளைக் கவரும் நோக்கில் தொடர்ச்சியான விளம்பர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என மாநில சுற்றுலா மற்றும் படைப்பாக்கப் பொருளாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் அறிவித்தார்.
img 20241125 wa0100
“இந்த முன்முயற்சிகள் பினாங்கு மாநிலத்தின் அழகை உலகத் தரம் வாய்ந்த பயண இடமாகத் திகழ வழிவகுக்கும்.

“பினாங்கு மாநிலத்தின் பாரம்பரிய தளங்கள் முதல் அழகிய கடற்கரைகள், இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் MICE-கான வாய்ப்புகள் (கூட்டங்கள், ஊக்கத்தொகை, மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) பெறுவதற்கும் மற்றும் பல்வேறு நோக்கங்களுக்காகவும் இந்தியப் பயணிகள் பினாங்கு மாநிலத்திற்கு வரவேற்கிறோம்,” என்று சட்டமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் வோங் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பெரிய மக்கள்தொகை
கொண்ட சென்னை மாநகரம் கடந்த
2024, அக்டோபர் நிலவரப்படி 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டு இந்தியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகத் திகழ்கிறது.

78 மில்லியன் மக்கள் வசிக்கும் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, உலகளவில், இந்தியா 1.458 பில்லியன் மக்களுடன் மக்கள்தொகையில் முன்னணியில் உள்ளது.

சென்னை தென்னிந்தியாவின் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் கல்வி மையமாக மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க உயர், நடுத்தர வர்க்க மற்றும் உயர்-நிகர மதிப்புள்ள மக்கள்தொகையின் தாயகமாகவும் உள்ளது என்று வோங் குறிப்பிட்டார்.

இந்த இலக்கு குழுக்கள் சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, பயணங்கள், கலாச்சார ஆய்வாளர்கள் மற்றும் இலக்கு திருமண திட்டமிடுபவர்களைப் பிரதிநிதிக்கின்றன.

“பினாங்கும் தமிழ்நாடும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏனெனில், பினாங்கின் இந்தியச் சமூகத்தின் பல உறுப்பினர்கள் தமிழ்நாட்டை தங்கள் பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.

மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு இந்த முன்முயற்சி திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக நின்ற அனைத்து தரப்பினரையும் பாராட்டினார். இந்த முயற்சி பினாங்கின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுலா, வணிகம் அல்லது மருத்துவத் தேவைகளுக்காக
பயணிகள் பயணிக்க இலகுவாக அமையும், என்றார்.

“பல தவனை சட்டமன்றக் கூட்டத்தொடரில் சென்னை-பினாங்கு நேரடி விமான சேவை தொடங்குவதற்கு கோரிக்கை விடுத்தேன். இதன் வெற்றியாக வருகின்ற டிசம்பர், 21 அன்று இச்சேவை தொடங்குவதை எண்ணி அகம் மகிழ்வதாக பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் வோங் யூ ஹர்ங், கெபுன் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் லீ பூன் ஹெங், பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் (PCEB) தலைமை செயல் அதிகாரி அஷ்வின் குணசேகரன் உட்பட பல மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.