பட்டர்வொர்த் – பள்ளியின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஏனெனில், அவை பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த மற்றும் வசதியான கற்றல் கற்பித்தல் சூழலை உறுதி செய்கின்றது.
இந்தக் கருத்தை பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அவர்கள் இன்று செயின்ட் மார்க் இடைநிலைப்பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவில் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு முதல் செயின்ட் மார்க் பள்ளியில் நடைபெறும் பல்வேறு முயற்சிகளுக்காக மாநில அரசு ரிம1 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதியை வழங்கியுள்ளதாக சாவ் தெரிவித்தார்.
“இதில் பள்ளிக் கட்டிட பராமரிப்பு, ஆய்வுக்கூட வசதிகள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பயனுள்ள கற்பிக்கும் சூழலை உருவாக்கும் பிற வசதிகள் அடங்கும். இது பினாங்கு மாணவர்கள் முழுமையான கல்வியினைப் பெற உதவுகின்றது.
இந்தப் புதிய கட்டடத்திற்கான செலவு சுமார் ரிம5.5 மில்லியன் ஆகும். அதில் ரிம3.2 மில்லியன் மத்திய அரசால் வழங்கப்பட்டது; மீதமுள்ள தொகை நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சி, நன்கொடை வள்ளல்கள், தேவாலய உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தின் நன்கொடை வழித் திரட்டப்பட்டது.
“மாநில அரசு, கல்வித்துறை மற்றும் பொது மக்கள் ஒன்றாக சேர்ந்து முன்னேற்றத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குவது எனக்கு பெருமையளிக்கிறது,” என்று சாவ் தனது உரையில் தெரிவித்தார்.
நான்கு மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடம் 2019ஆம் ஆண்டிலேயே நிறைவுப்பெற்றது. இருப்பினும், கோவிட்-19 தாக்கத்தின் காரணமாக அதன் அதிகாரப்பூர்வ தொடக்க விழா தாமதம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்கவும், கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறைக்கு ஆதரவு வழங்கவும், சிறந்த செயல்திறன் வாய்ந்த பள்ளிகளுக்கு சிறந்த உள்கட்டமைப்பு ஒரு சவாலாக இருக்கும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
“செயின்ட் மார்க் இடைநிலைப்பள்ளி மட்டுமல்ல; மலேசியாவின் பல்வேறு பள்ளிகளும் கல்வி அமைச்சு மற்றும் தங்களது மாநில அரசுகளிடமிருந்து வளங்களும் மானியங்களும் கிடைக்க நம்பிக்கை கொண்டு காத்திருக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், பள்ளி தலைமையாசிரியர் திருமதி டி.ஷாந்தி மற்றும் பள்ளி வாரியக் குழுத் தலைவரான ரெவ் சோங் ஹோ பின் ஆகியோர் எழுப்பிய பிரச்சனைகளைப் பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்வதாக முதலமைச்சர் சாவ் தெரிவித்தார்.
“பள்ளிக்கு அருகிலுள்ள கூட்டரசு துறை சாலையை இரண்டு வழித்தடங்களில் இருந்து நான்கு வழித்தடங்களாக விரிவுபடுத்தும் திட்ட மேம்பாடு, பாதுகாப்புக் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளி தலைமையாசிரியரும் கருத்து தெரிவித்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“இந்த விரிவாக்கம், குறிப்பாக பள்ளியின் முன் பகுதி போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை உருவாக்கும். எனவே, இந்த விவகாரத்தை பொதுப் பணித்துறைக்கு (PWD) எடுத்துச் சென்று, இந்த திட்டத்தில் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
“அதோடு, பள்ளியின் ஒன்றுக்கூடல் தலத்தில் கூரை அமைக்கும் கோரிக்கையையும் நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வேன்,” என சாவ் கொன் இயோவ் மேலும் கூறினார்.
அதுமட்டுமின்றி, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண பள்ளியும் ஆங்கிலிகன் தேவாலயமும் இணைந்து பணியாற்றும் என நம்பிக்கையை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சி. யீ கீன், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன், செனட்டர் டாக்டர் ஆர்.ஏ லிங்கேஸ்வரன் மற்றும் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.