தங்சோங் பூங்கா – பினாங்கு மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மற்றும் மிட்டா ஃபார் லைஃப் (Mitta For Life) அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த தர்மா சுகாதார கார்னிவல் 2026 எனும் இலவச சுகாதார முகாம் அஸாட் தமிழ்ப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பி40 (B40) வருமானப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்குத் தரமான இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதோடு, சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முகாமில் மொத்தம் 187 பேர் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்த ஏற்பாட்டுக் குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், உதவிக் குழுவினர் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியை மிட்டா ஃபார் லைஃப் அமைப்புடன் இணைந்து சிறப்பாக ஒருங்கிணைத்த டத்தோ டாக்டர் ஜெயஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பிற்கும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு கிளை செயலாளருமான டாக்டர் மாலதி நாயர் அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்த சுகாதார முகாமில் உயரம், எடை, உடல் நிறை குறியீடு (BMI), இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை உடல்நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பெண்களுக்காக கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை (HPV மற்றும் Pap Smear), மார்பக பரிசோதனை, முழுமையான உடல்நல மதிப்பீடு, கண் மற்றும் கண்புரை பரிசோதனை, உடல் அமைப்பு பகுப்பாய்வு, எலும்பு அடர்த்தி பரிசோதனை, தசை வலிமை மதிப்பீடு, பிசியோதெரபி ஆலோசனை மற்றும் இன்ஃப்ராரெட் பாத சிகிச்சை ஆகிய சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், எலும்பியல், கல்லீரல் மற்றும் செரிமான நோயியல், மகப்பேறு மற்றும் சிறுநீரக மகளிர் மருத்துவம், மார்பக அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் நிபுணர் மருத்துவர்களின் ஆலோசனைகளும், பொது மருத்துவ அதிகாரிகளின் சுகாதார ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
சமூக நலன், ஆரோக்கியம் மற்றும் தரமான மருத்துவ சேவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இதுபோன்ற சமூக சேவை முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளதாக அதன் தலைவர் தனபாலன் குறிப்பிட்டார்.
“இந்த இலவச சுகாதார முகாமின் மூலம் பங்கேற்பாளர்கள் நிபுணத்துவமிக்க மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டதால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மருத்துவச் செலவுகளை குறைப்பதோடு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, மருத்துவ நிபுணர்களிடம் நேரடியாக ஆலோசனை பெறும் வாய்ப்பும் கிடைத்தது.
“நீண்டகால நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர். சுகாதார விழிப்புணர்வு மூலம் குடும்பங்களுக்கு நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் குறித்த பயனுள்ள தகவல்களும் பகிரப்பட்டன.
“இத்தகைய இலவச மருத்துவ முகாம், தரமான சுகாதார சேவைகளை பொதுமக்கள், குறிப்பாக பி40 வருமானப் பிரிவைச் சேர்ந்தோருக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றியதுடன், சமூகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியாகவும் அமைந்தது”, என தனபாலன் நம்பிக்கை தெரிவித்தார்.