பட்டர்வொர்த் – பாகான் பகுதியில் உள்ள தாமான் ஜாவாவில் சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பும் அணுகல் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கூறுகையில், சுமார் ரிம340,000 செலவில் செபராங் பிறை மாநகர கழகம் (MBSP) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, இந்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவு பெற்றது.
“இந்தத் திட்டத்தில் ஜாலான் கம்போங் ஜாவா, லோரோங் ஜாவா 6 மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்கள் மேம்படுத்தப்பட்டதுடன் தொடர்புடைய பணிகளும் செயல்ப்படுத்தப்பட்டன.
“இங்குள்ள நடைபாதைகள் அருகிலுள்ள குடியிருப்புகள் உட்பட மக்களுக்கு முக்கியப் பாதையாக பயன்படுத்தப்படுகின்றன. இம்மேம்பாடுகளால் இப்பகுதி தற்போது தினசரி பயன்பாட்டிற்கும் பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கும் மேலும் பாதுகாப்பானதும் வசதியானதுமாக மாறியுள்ளது,” என்று அவர் இன்று தள மேற்பார்வையின் போது கூறினார்.
மேலும் அருகிலுள்ள சிறிய பூங்காவைப் பற்றி குறிப்பிடுகையில், பாகான் பகுதியில் மிகவும் கவர்ச்சிகரமான பசுமை இடங்களில் ஒன்றாக இருப்பதாக லிம் கூறினார்.
“இது சிறியதாக இருந்தாலும், வளர்ந்த மரங்கள் காரணமாக அமைதியான மற்றும் இனிமையான சூழலை உருவாக்குகிறது.
“நான் தனிப்பட்ட முறையில் இந்தப் பூங்காவை மிகவும் விரும்புகிறேன். அதன் அளவு சிறியதாக இருந்தாலும், அது சுகத்தையும் பசுமையையும் வழங்குகிறது. இதுபோன்ற பராமரிப்பு செய்யப்பட்ட அமைதியான இடம் தங்களது பகுதியில் இருப்பது மக்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்,” என்றார்.

இதேவேளை, பாகான் டாலாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், கடந்த ஆண்டு தளப் பார்வையின் போது குடியிருப்பவர்கள் முன்வைத்த பல பிரச்சனைகள் இந்தத் திட்டத்தின் மூலம் தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
“மரவேர் வெளிப்படையாக இருப்பதால் விளையாட்டு மைதானம் சேதமடைந்தது, நடைபாதைகள் உடைந்திருந்தது, வடிகால்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.
“இப்போது அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளன. தாமான் செனாங் மற்றும் தாமான் மேவா போன்ற அருகிலுள்ள குடியிருப்புகளை இணைக்கும் நடைபாதை தற்போது தினசரி பயன்பாட்டிற்கு பாதுகாப்பானதும் வசதியானதுமாக உள்ளது,” என்றார்.
குமரன் மேலும், இப்பகுதி காலை மற்றும் மாலை நேரங்களில் ஓட்டப்பயிற்சி, குடும்பச் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்காக பொதுமக்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாக கூறினார்.
மேலும், தெருவிளக்குகள் பழுது பார்க்கும் பணிகள் உட்பட கூடுதல் மேம்பாட்டு பணிகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த மேம்பாட்டு பணிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்காக MBSP மற்றும் இதில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் குமரன் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரனும் கலந்து கொண்டார்.