பாயான் லெப்பாஸ் – பினாங்கு மாநில முதலமைச்சரின் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இது மாநில மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
பினாங்கு மாநில முதலமைச்சரின் இந்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில், பினாங்கு மாநில ஆளுநர் ரம்லி ங்கா தாலிப் அவர்கள் மற்றும் அவரது துணைவியார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும், பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் அவரது துணைவியார் தான் லின் கீ; பினாங்கு சட்டமன்ற சபாநாயகர் லாவ் சூ கியாவ்; முதலாம் துணை முதலமைச்சர் முகமட் அப்துல் ஹமிட்; இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்டிப் சிங் டியோ; முன்னாள் முதலமைச்சரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங்; தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சரான ஸ்திவன் சிம் சீ கியோங் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொடக்க நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ரம்லி ங்கா தாலிப், முதலமைச்சர் மற்றும் கௌரவ விருந்தினர்கள் ஆகியோர் பிரதான மேசையில் ‘லோர் சாங்’ விழாவை நிறைவுச் செய்தனர்.
அதே நேரத்தில், சிங்க நடனம் போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளுடன் விழாவும் அலங்கரிக்கப்பட்டது.
மலேசியாவின் முக்கிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Euphoria குழுவின் நவீன நடனம்; பினாங்கு பில்ஹார்மோனிக் இசைக்குழு (PPO) படைப்பு; சிறப்பு குழந்தைகளின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய மேளம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
மேலும், இந்நிகழ்ச்சி போர் தே சீனப்பள்ளி மாணவர்கள் வழங்கிய 24 பருவத் தப்பட்டை இசைக்குழு (24 Festive Drums) உற்சாகமாக நிகழ்ச்சியும் வருகையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ் கொன் இயோவ், இந்நிகழ்ச்சி வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாது, மாநில மக்களின் பன்முக கலாசாரத்தை முன்னிறுத்தும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
சுமார் 10,000 பேரை வரவேற்கும் இலக்கு எட்டப்பட்டதோடு, இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக உற்சாகத்துடன் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மொத்தத்தில், இது அனைவரையும் ஒன்றிணைத்து, பரஸ்பர ஆதரவு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் வெற்றிகரமான சீனப் புத்தாண்டு கொண்டாட்டமாகும்.
“பினாங்கு எப்போதும் முன்னணியில் இருப்பது போல, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சமூக நலனில் நாம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ முடியும்,” என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழாவின் முடிவில், மாநில முதலமைச்சர் மற்றும் அவரது துணைவியார் பொற்கரத்தால்
சமூகநல இல்லங்களின் பிரதிநிதிகள் மற்றும் குழந்தைகளுக்கு ‘பண்டிகை பணம்’ வழங்கினர்.
