பட்டர்வொர்த் – ஜாலான் மெங்குவாங்கில் அமைந்துள்ள இந்திய சமூகத்திற்கான பிரதான மண்டபமாக விளங்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பினாங்கு இந்து அறப்பணி வாரிய (PHEB) ஆணையரும் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறினார்.
குமரனின் கூற்றுப்படி, ஜூலை,29 ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் இந்த ஆண்டு அக்டோபர்,19 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்த மேம்பாட்டுப் பணிகளில் புதிய குளிருட்டி அமைப்பு பொருத்துதல், சோதனை செய்தல் மற்றும் பிற மேம்பாட்டுப் பணிகளும் அடங்கும். மேலும் மண்டபத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் வசதியை மேம்படுத்துவதற்கான பிற தொடர்புடைய பணிகளும் இதில் அடங்கும்.
“மதம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்கு ஒரு முக்கிய இடமாக விளங்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
குமரனின் கூற்றுப்படி, 2024 ஜூலை,1 முதல் ஆகஸ்ட் வரை, மண்டபத்தின் மேம்படுத்தல், பழுதுபார்ப்பு மற்றும் செயல்பாட்டை நிர்வகிக்க குத்தகையாளர்களை நியமிக்க ஒரு முன்மொழிவு கோரிக்கை (RFP) வழங்கப்பட்டது.
“இருப்பினும், கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு பெறப்பட்ட குத்தகைகள் நியாயமற்றவை என்று வாரியம் கண்டறிந்து, திட்டத்தை சுயமாக தொடர முடிவு செய்தது.
“மார்ச்,21 முதல் ஏப்ரல்,23 வரை இந்த மண்டபத்தில் குளிரூட்டி அமைப்பு மற்றும் தொடர்புடைய பணிகளை மாற்றுவதற்கான விநியோகம், பொருத்துதல், சோதனைகள் மற்றும் பிற பணிகளுக்காக திறந்த குத்தகை முறை அமல்படுத்தப்பட்டது.
“கடந்த ஏப்ரல்,3 ஆம் தேதி அந்த மண்டபத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒன்பது ஒப்பந்தக்காரர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஏழு பேர் தங்கள் குத்தகையைச் சமர்ப்பித்தனர்,” என்று குமரன் விவரித்தார்.
இந்த கொள்முதல் துணைக் குழுவின் விரிவான மதிப்பீட்டைத் தொடர்ந்து, இந்த மேம்பாட்டுக்கான குத்தகை ஒப்பந்தம் பிளாட்டினம் எம்&இ இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்று குமரன் கூறினார்.
“இந்தப் புதிய அமைப்பின் விலை ரிம488,000 ஆகும். இது முற்றிலும் புதிய ‘water-cooled Dunham-Bush screw chiller’, ஒரு புதிய மின் பலகை, கூரை கசிவு பழுது, கூரை பழுது மற்றும் மண்டபத்தில் ஒரு புதிய தொங்கும் வகையில் மேற்கூரையை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
“பழைய குளிரூட்டி அமைப்பை அகற்றும் பணி நிறைவடைந்துள்ளது, புதிய அமைப்பை நிறுவும் பணி விரைவில் தொடங்கும்.
“அனைத்துப் பணிகளும் சீராக நடைபெற்று வருகின்றன, மேலும் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அக்டோபர்,19 ஆம் தேதி பணிகள் நிறைவடைந்ததும், சோதனைப் பணிகள் முடிந்ததும், அக்டோபர் நடுப்பகுதியில் மண்டபம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று குமரன் பகிர்ந்து கொண்டார்.
“இந்த மண்டபம் மீண்டும் செயல்படத் தொடங்கியதும், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குழுவுடன் இணைந்து அதை நிர்வகிப்போம். இதில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வோம்.
அதைத் தவிர, எங்கள் கடந்த தவனைப் பதவிக் காலத்தில், அறப்பணி வாரியம் தீவில் உள்ள ஸ்ரீ குஞ்ச் பிஹாரி கோயிலையும் மேம்படுத்தியது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
“தீவின் சோலோக் யோர்க் சாலையில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலும், பல கோயில்களுடன் சேர்த்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல் கட்டத்தில் உள்ளது,” என்று குமரன் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் PHEB துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் பல ஆணையர்களும் கலந்து கொண்டனர்.