பண்டார் காசியா பத்து காவான் நெடுஞ்சாலை இப்போது ஜாலான் துன் அப்துல்லா அகமது படாவி என பெயர்மாற்றம் காண்கிறது

Admin
cm 1

 

புக்கிட் தம்புன் – அண்மையில் உறுதியளித்தபடி, ஜாலான் பத்து காவானிலிருந்து லிங்காரான் காசியா செலாத்தான் வரையிலான 5.45 கிலோமீட்டர் (கிமீ) பண்டார் காசியா நெடுஞ்சாலை அதிகாரப்பூர்வமாக ஜாலான் துன் அப்துல்லா அஹ்மத் படாவி எனப் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது.

மலேசியாவின் முன்னாள் 5வது பிரதமர், இந்த நாட்டையும் பினாங்கு மாநிலத்தையும் மேம்படுத்துவதில் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினர் தொடர்ந்து நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தனது நிர்வாகம் விரும்புவதாக முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

“ஒரு புதிய நகரமாக, அதிநவீன தொழில்துறை பூங்காவாக, குறிப்பாக பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்குச் செயல்படுகிறது. உண்மையில், பாக் லா (துன் அப்துல்லா) பண்டார் காசியாவிற்கு பல பங்களிப்புகளைச் வழங்கியுள்ளார், என சாவ் நினைவுக் கூர்ந்தார்”

கெபாலா பத்தாஸுக்கு அருகிலுள்ள விஷன் பூங்காவில் ‘பக் லா’ நினைவுக் காட்சியகத்தை உருவாக்க பெர்தாம் மாநில சட்டமன்ற உறுப்பினர், டத்தோ ஸ்ரீ ரீசல் மெரிக்கன் முன்மொழிவுக்கு மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகவும் கொன் இயோவ் தெரிவித்தார்.

“காட்சியகம் அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது, மலேசியாவின் தேசிய ஆவணக் காப்பகத் துறையும் இந்த முன்மொழியப்பட்ட இத்திட்ட இடத்தை பார்வையிட்டுள்ளது. மேலும், மாநில அரசு துறை அடுத்தக் கட்ட பணிகளை மேற்கொள்ள மலேசியாவின் தேசிய ஆவணக் காப்பகத் துறையிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் விளக்கமளித்தார்.

அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டான் ஸ்ரீ கமாலுதீன் அப்துல்லா, தங்கள் மறைந்த தந்தையின் பெயரை பண்டார் காசியா நெடுஞ்சாலைக்கு மறுபெயரிடுவதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிக்கு தானும் தனது குடும்பத்தினரும் நெகிழ்ச்சியடைந்ததாகக் கூறினார்.

அதற்கு முன்னதாக, நிதி, பொருளாதார மேம்பாடு & நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான கொன் இயோவ், பண்டார் காசியா நெடுஞ்சாலையை ஜாலான் துன் அப்துல்லா அகமது படாவி என மறுபெயரிடுவதற்கான தொடக்க விழாவை இன்று நிறைவு செய்தார்.

cm 2

இதனிடையே, பத்து காவானையும் நிபோங் திபாலையும் இணைக்கும் ஜாலான் பத்து காவான் தொழில் பூங்கா 2 (BKIP2) -க்கும் ஜாலான் துன் அப்துல்லா அமாட் படாவி என்று பெயரிடப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.

“இன்று, பண்டார் காசியா ஒரு மூலோபாய இலக்காகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முக்கிய மையமாகவும் உருவெடுத்து, சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸாம் ஷா அல்லது இரண்டாவது பினாங்கு பாலம் என்று அழைக்கப்படும் கட்டுமானத்துடன் மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் போது அவரின் தொலைநோக்குப் பார்வை நனவாகியுள்ளது.

“மேலும், முதல் பினாங்கு அனைத்துலக விமான நிலைய (PIA) விரிவாக்கத் திட்டம்; பினாங்கு சென்ட்ரல் மேம்பாடு; பட்டர்வொர்த் லிங்காரான் லுவார் நெடுஞ்சாலை (BORR) கட்டுமானம் மற்றும் வடக்கு பொருளாதார வழித்தடப் பகுதியை (NCER) நிறுவுதல் ஆகியவற்றில் துன் அப்துல்லா ஆற்றிய பங்களிப்புகளுக்கு பினாங்கு மக்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்,” என்று அவர் விளக்கமளித்தார்.

உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில புவியியல் பெயர்கள் குழுவின் தலைவர், ஜைரில் கிர் ஜோஹாரி; ஆட்சிக்குழு உறுப்பினர்களான பாமி சைனோல், டத்தோ ஸ்ரீ சுந்தராஜு, செபராங் பிறை மாநகர் கழக மேயர் (எம்.பி.எஸ்.பி), டத்தோ படேருல் அமீன் அப்துல் ஹமீட்; மற்றும் பினாங்கு மாநில அம்னோ இணைப்புக் குழுவின் தலைவர் டத்தோ மூசா ஷேக் ஃபட்சிரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, ஏப்ரல் 16, 2025 அன்று, மலேசியாவின் முன்னாள் 5வது பிரதமரின் புகழ் எதிர்கால சந்ததியினரால் தொடர்ந்து நினைவுக்கூறப்படும் வகையில், துன் அப்துல்லாவுடன் இணைந்து பண்டார் காசியா பத்து காவான் நெடுஞ்சாலையின் பெயரை மாற்ற தனது நிர்வாகம் விரும்பியதாக கொன் இயோவ் கூறினார்.