ஜார்ச்டவுன் – பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) கியோஸ்க் வடிவ வணிக தளங்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சிறிய வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தங்களுக்கேற்புடைய வணிக இடங்களின் பற்றாக்குறை காரணமாக பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர் என்று விளக்கமளித்தார்.
“அவர்களுக்கு நிதி உதவி மட்டுமல்லாது, உகந்த இடம் மற்றும் டிஜிட்டல் விளம்பர ஆதரவும் தேவைப்படுகின்றன.
“பத்து உபானில் பொருத்தமான பகுதிகளில் தற்காலிக வியாபார தளங்கள் அல்லது கியோஸ்க்குகள் போன்ற சட்டப்பூர்வ வணிக தளங்களை வழங்க வேண்டும் எம்.பி.பி.பி முன்வர வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.
இந்தச் செயல் திட்டம், சட்டவிரோதமாக வியாபாரம் செய்யும் வழக்குகளைத் தவிர்க்கும் வகையில், இரு தரப்பும் நன்மை அடையும் ஒரு நிலையை உருவாக்கும் என நம்பப்படுகிறது,” என்று 15வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் மூன்றாம் தவணையின் முதல் கூட்டத்தின் அமர்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
போக்குவரத்து பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்த குமரேசன், அதிகரித்து வரும் சாலை நெரிசலை நிவர்த்தி செய்ய ஸ்மார்ட் போக்குவரத்து விளக்குகளை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
“ஜாலான் புக்கிட் கம்பீரில் ஜாலான் அஜீஸ் இப்ராஹிம் செல்லும் பாதையில் எதிர்நோக்கும் நெரிசல், குறிப்பாக உச்ச நேரங்களில் குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
“சமிக்ஞை விளக்கு நேர இடைவெளியை மதிப்பாய்வு செய்தல், போக்குவரத்து அதிகாரிகளை நியமித்தல் அல்லது இந்தப் பகுதியில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் (smart traffic light) உள்ளிட்ட ஒரு விவேகமான போக்குவரத்து செயல் திட்டத்தைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) பகுதியில் இணையத் தொடர்பு மோசமாக இருப்பது குறித்து அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
“ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகவும், பினாங்கின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சிக்கு யூ.எஸ்.எம் ஒரு முக்கிய உந்துசக்தியாகவும் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்சனை அதன் உற்பத்தித்திறன், கற்பித்தல் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் கூட பாதிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இணையத் தொடர்பு மற்றும் அதன் வேகத்தை மேம்படுத்த, குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இடங்களில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் தொலைத்தொடர்பு வாரயத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுமாறு பினாங்கு அரசாங்கத்தை குமரேசன் கேட்டுக்கொண்டார்.