பத்து உபான் – பினாங்கு வேலைவாய்ப்பு கார்னிவல் 2025, உள்ளூர் மக்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அவர்களின் திறமைகளை ஊக்குவித்து, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தகுந்த பங்களிப்பை வழங்குகிறது.
பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ‘பினாங்கு வேலைவாய்ப்பு கார்னிவல் 2025’-ஐ அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.
“வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரங்களில் எப்போதும் முன்னுரிமை அளிப்பேன். எனது தொகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே வேலைவாய்ப்பை காண்கிறேன். எனவே, இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அதிக முனைப்புக் காட்டுவேன், என குமரேசன் கூறினார்.
“நாட்டின் மற்றும் மாநிலத்தின் முன்னேற்ற பயணத்தில் எவரும் பின் தங்கி விடக்கூடாது என்பதே எனது விருப்பம். எனவே, இங்கு வந்துள்ள அனைவரும் வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தொடர்புகளை உருவாக்கி, புதிய சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்பதற்காக காத்திருக்காமல், இன்று முதலே உங்களுடைய எதிர்காலத்தை நீங்கள் உருவாக்க தொடங்குங்கள்,” என வலியுறுத்தினார்.
இந்த கார்னிவலில், தொழிற்கல்வி முடித்தவர்களும், திறன் பயிற்சி முடித்தவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு திரண்டு வந்திருக்கிறார்கள். பினாங்கு மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. நம் திறமைக்கேற்ற வேலையை நாம் தேடிக்கொள்ள இந்தக் கார்னிவல் பெரிதும் உதவும் என நம்புகிறேன்.
இந்த காலை வேளையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என முத்துச் செய்திகள் நாளிதழிடம் கூறினார்.
மேலும் அண்மையில் பத்து உபான் தொகுதியில் வேலை இழந்த 10 பேருக்கு அவர்களது வாழ்வாதார செலவுகளுக்கு பெர்கேசோ நிறுவனம் நிதி உதவி அளித்ததை மாண்புமிகு குமரேசன் எடுத்து வழங்கினார்.
“இந்த வேலைவாய்ப்பு கார்னிவல், இப்பகுதியில் முதன்முறையாக நடத்தப்பட்டு மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கும் அரிய வாய்ப்பாகும். இதனை தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
இக்கார்னிவலில் 19 நிறுவனங்கள் கலந்து கொண்டு, மொத்தமாக 1,516 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டது என பேர்கேசோ (PERKESO) தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
“இதில் பங்கேற்கும் நிறுவனங்களில் Flex, Ambu Sdn. Bhd, Sam Engineering & Equipment, Ase Electronics Sdn Bhd உள்ளிட்ட பல பெருநிறுவனங்களும் அடங்கும். இவை தொழில்துறையில் மட்டுமன்றி, உள்ளூர் மனித வளத்தை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகும்,” எனக் குறிப்பிட்டார்.
“1,516 வேலை வாய்ப்புகள் என்பது வெறும் எண் அல்ல; இது பினாங்கு மக்களுக்கு, குறிப்பாக பத்து உபான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய தொடக்கத்தையும், சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பையும் குறிக்கும் ஒரு முக்கிய அடையாளமாகும்.
“தற்போது துரித வளர்ச்சிக் கண்டு வரும் டிஜிட்டல் பரிணாம சூழலில், வேலை சந்தையின் தேவைக்கேற்ப திறன் மேம்பாடு, தொழிற்கல்வி(TVET) தகுதிப் பெறுதல், டிஜிட்டல் தொழில் முனைவோர் பயிற்சிகள் மற்றும் இரண்டாம் வாய்ப்புத் தேடும் வேலை இழந்த தரப்பினருக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.
“இத்தகைய வேலைவாய்ப்பு கார்னிவல் என்பது வேலை தேடும் நபர்களையும், பணியளிக்க விரும்பும் நிறுவனங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைகிறது.
“இந்த வேலைவாய்ப்பு கார்னிவலை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக பினாங்கு பேர்கேசோ, பத்து உபான் சட்டமன்ற சேவை மையக் குழுவினருக்கும் மற்றும் இந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என அவர் தெரிவித்தார்.