பினாங்கில்  ஐந்தாண்டுகளில் 200,000 மரங்கள் நட இணக்கம் – ஜெக்டிப்

Admin

ஜார்ஜ்டவுன்– ” 2008-ஆம் ஆண்டு பினாங்கு மாநில ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் இன்று வரை மாநில அரசு பசுமை திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி செயல்படுகிறது. தேசிய ரீதியில் பிரமிக்கும்  குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கு பினாங்கு மாநிலத்தை பசுமை மிக்க மாநிலமாக பிரகடனம் செய்கிறது,” என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அர்மேனியன் சுற்று வட்டாரத்தில் மரம் நடும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து இவ்வாறு கூறினார்

உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நகர்புற & கிராமப்புற மேம்பாடு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெக்டிப் கூறுகையில் 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரை பினாங்கில்  338, 954 மரங்கள் நடப்பட்டன என்றார்

ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில் பருவமாற்றம் காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் உலக சீதோஷ்ண நிலை 1.5°c –க்கும் கூடுதலாக அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டது

“14-வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையில் மாநில அரசு ஐந்து ஆண்டுகளில் 100,000 மரங்கள் நடுவதாக வாக்குறுதி அளித்தது. இருப்பினும், உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற வகையில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக(200,000) மாற்ற இணக்கம் கொண்டுள்ளார். மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ” என மேலும் தெரிவித்தார்

இந்நிகழ்வில் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் எங், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய், பினாங்கு மாநகர் கழகத் தலைவர் பொறியியலாளர் டத்தோ இயூ துங் சியாங் மற்றும்  மாநகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

அர்மேனியன் சுற்று வட்டாரத்தில் 34 மரங்கள் நடப்படும் . இத்திட்டம் மாநில அரசு மற்றும் மாநகர் கழக ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாநகர் கழக வரவுசெலவுத் திட்டத்தில் இயற்கை வடிவமைப்புத் திட்டத்திற்கு ரிம500,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்