பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டம் மிதமான முறையில் அனுசரிக்கப்படும் –  இராமசாமி

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான தைப்பூசக் கொண்டாட்டம் தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஓ.பி) பின்பற்றி செவ்வென நடைபெறும் என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அறிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக இவ்வாண்டும் தைப்பூசக் கொண்டாட்டம் மிதமான முறையில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அனுசரிக்கப்படும். எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு மன்றம் வரையறுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றியே இக்கொண்டாட்டம் நடைபெறும்.

மேலும் பேசிய பேராசிரியர், தைப்பூசத் தினத்தன்று ஆலயத்திற்கு வருகையளிக்கும் பக்தர்கள் முன்கூட்டியே சுய கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் இப்பெருந்தொற்று பரவுவதை தடுக்க முடியும் என அவர் பொதுமக்களை நினைவூட்டினார்.

நேற்று, தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் டத்தோ ஹலிமா பிந்தி மொஹமட் சாடிக் உடன் பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அரசு அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாண்டு இரத ஊர்வலத்திற்கும் பால் குட நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலகு காவடிகள், மொட்டை அடித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், இரத ஊர்வலம் காலை 8.00மணிக்குத் தொடங்கி குயின் ஸ்ரிட் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஐந்து இடங்களில் (டத்தோ கெராமாட் காமாட்சி அம்மன் ஆலயம், லோரோங் கூலிட் அம்மன் ஆலயம், கோத்லிப் சாலை முனிஸ்வரர் ஆலயம், ஜாலான் கெபுன் பூங்கா ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மற்றும் தண்ணீர்மலை ஆலயம்)  மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக நிற்கப்படும்.

“இரத ஊர்வலத்தில் ஒரு நேரத்தில் 500 பக்தர்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளவிரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்து அத்தினத்தன்று அடையாள அட்டை அணிவிக்கப்படுவர். இதன் மூலம், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலும்.

“மேலும், இந்த ஆண்டு இரத ஊர்வலத்தில் தேங்காய் உடைத்தல், உணவு வழங்குதல், தண்ணீர் பந்தல் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது,” என தண்ணீர்மலை, அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

தண்ணீர்மலை, அருள்மிகு ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத் தலைவர் டத்தோ சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

“தொடர்ந்து ஆலயத்தில் பால்குடம் ஏந்தும் பக்தர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இரண்டு தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ஆலயத்தில் கிருமிநாசினி தெளிக்கப்படவேண்டும் என்பதால் பக்தர்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்த காலம் தாமதம் ஏற்படலாம். ஆகவே, ஆரோக்கியக் குறைப்பாடு கொண்டவர்கள் இந்நிலைமையை கருத்தில் கொண்டு பிறருக்கு வழிவிட வேண்டும்.

“இம்முறை பால்குடங்கள் யூத் பார்க்கில் இருந்து தண்ணீர்மலை ஆலயம் நோக்கி கொண்டுவர வேண்டும். ஆலய வளாகத்திலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வீதிக் கடைகள், உணவு வழங்குதல், தண்ணீர் பந்தல்கள் என அனைத்துக்கும் அனுமதி இல்லை”, என ஆலயத் தலைவர் சுப்பிரமணியம் விவரித்தார்.

எவ்வாறாயினும், இவை அனைத்தும் தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிடும் இறுதி நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு பின்னரே தீர்மானிக்கப்படும் என டத்தோ சுப்பிரமணியம் தெளிவுப்படுத்தினார்.