பினாங்கில் வாங்கும் சக்திக்கு உட்பட வீடமைப்புத் திட்டம் அதன் இலக்கை அடைய உத்வேகம்

Admin
b601cbd3 df89 4a2d baf0 9375bd038540

ஜார்ச்டவுன் – பினாங்கு2030 இலக்கின் கீழ் 220,000 யூனிட் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை (ஆர்.எம்.எம்) வழங்குவதற்கான இலக்கை மாநில அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், அதனை அடைவதில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகின்றது.

2024 அக்டோபர், 31 நிலவரப்படி மொத்தம் 162,689 வீடுகள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன. இதில் 51,680 வீடுகள் கட்டுமானப் பணி மேற்கொள்ளத் தயாராகவும், 22,456 வீடுகள் கட்டுமானத்திலும் மற்றும் 88,553 வீடுகள் வடிவமைப்புக் கட்டத்திலும் உள்ளன.

மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு சட்டமன்றக் கூட்டத்தில் இடம்பெற்ற தனது தொகுப்புரையின் போது இதனைப் பகிர்ந்து கொண்டார்.

“மீதமுள்ள 88,553 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதற்கு தொடர்புடைய மேம்பாட்டாளர்களை மாநில அரசு கண்காணித்து வருகிறது. அவை இன்னும் திட்டமிடல் நிலையில் உள்ளன,” என்று சுந்தராஜூ மேலும் கூறினார்.

திறந்த சந்தை பிரிவின் கீழ் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை விண்ணப்பிப்பதற்கான விதியாக, அதிகபட்ச குடும்ப வருமான வரம்பு ரிம20,000 என மாநில அரசு அங்கீகரித்துள்ளதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த நடவடிக்கை, பணக்காரர்கள் அல்லது உயர்-வருமானக் குழுக்கள், குறிப்பாக T20 குழுவினர், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளைப் பெறுவதை தடுப்பதோடு இப்பிரிவுக்கு ஏற்ற தகுதியான உரிமையாளருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்ட வீடுகள் உயர்தர தரத்தில் வழங்குவதை உறுதி செய்வதில் மாநில அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் சுந்தராஜூ உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீட்டுப் பெறுநர்களிடையே வீட்டு உரிமையின் உணர்வை மேம்படுத்துவதற்காக, வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டம் (Rumah Mampu Milik) அடுத்த ஆண்டு ஜனவரி முதல் முத்தியாரா வீடமைப்புத் திட்டம் (RMK) என பெயர் மாற்றம் காணப்படுகிறது என்றும் சுந்தராஜூ பகிர்ந்து கொண்டார்.

பினாங்கு வீட்டுவசதி வாரியத்தின் (LPNPP) முன்மொழிவுக்கான கோரிக்கையின் இறுதிக் கட்டத்தில் உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் இருப்பதாகவும் சுந்தராஜூ பகிர்ந்து கொண்டார்.

“விஸ்மா தெலாகா போன்ற அடுக்குமாடி சொத்து உரிமைகளைப் பெறத் தவறிய பழைய வீட்டுத் திட்டங்களை அரசு கண்காணித்து வருகின்றது. இந்த வீடமைப்பு மறுமேம்பாட்டுத் திட்டத்திற்குப் பரிசீலிக்கப்படும்.

“இருப்பினும், இத்திட்டத்தின் செயல்பாடு உரிமையாளர்கள் மற்றும் மாநில அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டது.

“மாநில வீடமைப்பு வாரியம், முன்மொழி கோரிக்கை(RFP) வழங்கி அதன் மறுமேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான முன்னதாக தாமான் சியாகாப்பின் மேலாண்மைக் கழகத்தை (MC) மீண்டும் செயல்படும் செயல்பாட்டில் உள்ளது.

இதனிடையே, மாநில அரசு சுற்றுச்சூழல் போர்ட்போலியோ கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவச மறுசுழற்சி பைகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இப்பிரச்சாரம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

“இதைத் தொடர்ந்து, மறுசுழற்சி பைகளின் விநியோகம் படிப்படியாக குறைக்கப்படும். இந்தப் பிரச்சாரம் வாயிலாக ஒரு மறுசுழற்சி பை ரிம2.00 கட்டணத்திற்கு விற்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“டிசம்பர் 2025க்குள் மறுசுழற்சி பைகளை விநியோகிப்பதை நிறுத்துவது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பது இதன் நோக்கமாகும்.

“இருப்பினும், இந்த முன்மொழிவு இன்னும் ஆரம்பக் கட்ட விவாதத்தில் உள்ளது. மேலும் மாநில அரசாங்கம், பொருளாதாரத் திட்டமிடல் துறை (BPEN) மற்றும் பினாங்கு பசுமைக் கழகம் (PGC) மூலம் இந்த முயற்சியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.