பினாங்கில் வாடகைக்கார் சேவை பாரம்பரிய  முறையில் இருந்து நவீன சேவைக்கு உருமாற்றம் காண்கிறது.

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்  ‘ ON-DEMAND ECONOMY E-HAILING’ அல்லது ‘cALLme CAB’ எனும் செயலியை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

“அண்மைய காலமாக வாடகைக்கார் ஓட்டுநர்களின் வருமானம் தனியார் நிறுவன வாடகைக்கார் திட்டத்தின் அறிமுகத்தால் பாதிக்கப்பட்டது. தற்போதைய பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னெடுப்புக் கொண்டு செல்கிறது. இந்த நவீன மாற்றத்திற்கு ஏற்ப வாடகைக்கார் ஓட்டுநர்கள் இப்புதிய செயலி அறிமுகம்  செய்தது வரவேற்கத்தக்கது,” என முதல்வர் தெரிவித்தார்.

” வாடகைக்கார் ஓட்டுநர்கள் பிரத்தியேக உரிமம், காப்புறுதி மற்றும் முறையான கார் பரிசோதனை மேற்கொள்கின்றனர். எனவே, இந்தச் செயலி அறிமுகத்தால் மலிவான விலையில் சேவை வழங்கும் போது பயணிகள் பிற சேவையைக் காட்டிலும்  வாடகைக்காருக்கு முன்னுரிமை வழங்குவர், என செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது மக்கள் விவேக கைத்தொலைபேசி துணையுடன் விரல் நுனியில் விரைவாக, நம்பிக்கை க்குரிய மற்றும் பாதுகாப்பு வழங்க கூடிய சேவையை தான் விரும்புகின்றனர். எனவே, வாடகைக்கார் ஓட்டுநர்கள் பாரம்பரிய முறையை விடுத்து நவீன  தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்த ஆயுத்தப் பணியில் ஈடுப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

பினாங்கு மாநிலத்தில் ஏறக்குறைய 2,000 பதிவுப்பெற்ற வாடகைக்கார் ஓட்டுநர்களில் தற்போது 500 ஓட்டுநர்கள் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இத்திட்டம் ‘அங்காசா’ சங்கம் மற்றும் பினாங்கு வாடகை கார் ஓட்டுனர்கள் ஒன்றியம் இணை ஏற்பாட்டில் பினாங்கில் தொடக்க விழாக்கண்டது.