பினாங்கு இந்தியர் சங்கத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவுபெற நன்கொடையாளர்களின் பங்களிப்பு அவசியம்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்தியர் சங்கத்தின் இலக்குகள் அடைய உதவிக்கரம் நீட்டி வரும் நன்கொடையாளர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுக்கூரும் பொருட்டு ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது, இச்​​சங்கத்தின் வளாகத்தில் நிர்வாகக் கட்டிடம் மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகிய இரண்டு கட்டுமானத் திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன. நான்கு மாடி நிர்வாகக் கட்டிடம் 78% நிறைவடைந்த வேளையில், அதே நேரத்தில் பல்நோக்கு மண்டபம் தற்போது 28% நிறைவடைந்து வருகிறது.

பினாங்கில் உள்ள இந்தியச் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக பினாங்கு இந்தியர் சங்கம் மற்றும் அதன் மதிப்பிற்குரிய நன்கொடையாளர்களை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் பாராட்டினார்.

“இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, குறிப்பாக பல்நோக்கு மண்டபத்திற்கான நிர்மாணிப்புத் திட்டத்தை நிறைவுசெய்ய பினாங்கு இந்தியர் சங்கம் அசைக்க முடியாத உறுதிபாடு கொள்கிறது.

“இத்திட்டம் முடிந்ததும், இந்தப் பல்நோக்கு மண்டபம் இந்தியச் சமூகத்தின் கல்வித் தேவைகளை மட்டுமல்லாது, பிற சமூகத்தினருக்கும் மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தும் சிறந்த மையமாக மாறும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பினாங்கு இந்தியர் சங்கம் ஏற்பாட்டில்
ஜார்ச்டவுனில் உள்ள ஈஸ்டர்ன் மற்றும் ஓரியண்டல் தங்கும்விடுதியில் நடைபெற்ற சிறப்பு விருந்தோம்பலின் போது சாவ் தனது உரையில் இவ்வாறு கூறினார். பினாங்கு ஆளுநர் துன்
துன் அஹ்மத் ஃபுஸி அப்துல் ரசாக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு, ஷான் பூர்ணம் மெட்டல் தலைமை செயல் அதிகாரி டத்தோ செல்வகுமார் சண்முகம் செட்டி மற்றும் பினாங்கு இந்தியர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தோம்பலின் போது, பினாங்கு இந்தியர் சங்கத்தின் கட்டுமானத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மாநில அரசின் சார்பாக ரிம100,000 நன்கொடையாக வழங்குவதாக சாவ் உறுதியளித்தார்.