ஜார்ச்டவுன் – பினாங்கில் வரவிருக்கும் பினாங்கு முத்தியாரா இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் உட்பட, பினாங்கில் உள்ள முக்கிய வளர்ச்சித் திட்டங்களிலிருந்து உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் பயனடைவதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களின் பொருளாதார நன்மைகள் உள்ளூர் சமூகத்திற்குள் செல்வதை உறுதி செய்வதற்கு, பிரதான ஒப்பந்ததாரருக்கும் உள்ளூர் வணிகங்களுக்கும் இடையிலான வணிக பொருத்த அமர்வுகள் மிக முக்கியமானவை என்று சாவ் கூறினார்.
“பினாங்கில் உள்ள எல்.ஆர்.டி திட்டம், நாட்டில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பான எம்.ஆர்.டி கோப் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இத்திட்டத்தின் தொகுப்பு ‘Q’விற்கு எஸ்.ஆர்.எஸ் கூட்டமைப்பு நியமிக்கப்பட்டுள்ளது,” என்று சாவ் கூறினார்.

இந்த ஏற்பாட்டின் ஒரு பகுதியாக, சுமார் 40% பொருட்கள் மற்றும் துணை ஒப்பந்தப் பணிகள் உள்ளூர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் விளக்கமளித்தார்.
“எனவே, மலேசிய இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கம் (MICCI) வேண்டுகோளின் பேரில், பினாங்கில் LRT திட்டத்திற்கான வணிக வாய்ப்புகள் குறித்த தகவல்களை வழங்க MRT Corp மற்றும் SRS கூட்டமைப்புடன் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்
இதுபோன்ற முயற்சிகள் உள்ளூர் பங்கேற்புக்கு அதிக வாய்ப்புகளைத் திறக்கும் என்று சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
“பினாங்கு எல்.ஆர்.டி திட்டத்தில் நமது உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், இத்திட்டத்தின் பிரதான ஒப்பந்ததாரருக்கு உதவ முடியும் என்றும் நம்புகிறோம்.
“எல்.ஆர்.டி திட்டத்திற்கு மட்டுமல்ல, அனைத்து பெரிய திட்டங்களுக்கும், உள்ளூர் விநியோகஸ்தர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைந்து பினாங்கின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும்” என்று சாவ் தனது உரையில் கூறினார்.

பினாங்கில் உள்ள மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின்(MICCI) அற்புதமான முயற்சியில் வசதிக் குறைந்தோருக்கு தீபாவளிப் பரிசுக்கூடை இன்று லிட்டல் இந்தியாவில் வழங்கப்பட்டது.
சுமார் 150 வசதிக் குறைந்த குடும்பங்களுக்குத் தீபாவளி அத்தியாவசியப் பொருட்களை பினாங்கு இந்தியர் வர்த்தகர் தொழிலியல் சங்கம் சார்பில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் எடுத்து வழங்கினார்.
1920 களில் மலேசியாவில் நிறுவப்பட்ட ஆரம்பகால இந்தியர் வர்த்தக சங்கமாகத் தொடங்கிய பினாங்கு MICCI நமது சமூகத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துவதில் முன்னணியில் உள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பினாங்கின் வரலாற்றில் MICCI ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது . வணிகங்கள் வளர உதவுதல், தொழில்முனைவோரை ஆதரித்தல் மற்றும் சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த அமைப்பு இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் சமூகத்திற்கு சேவை செய்வதில் அதன் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

“பினாங்கு மாநில அரசின் சார்பாக, மலேசிய பினாங்கு வர்த்தகம் மற்றும் தொழிலியல் சங்கம் நமது மாநிலத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும், குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் உங்கள் பங்கை மிகைப்படுத்த முடியாது.
“இதனிடையே, வசதிக் குறைந்த சமூகங்களை உயர்த்துதல், ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல் மற்றும் நமது பன்முக கலாச்சாரம் சமூகத்தில் ஒற்றுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட மாநிலத்தின் பினாங்கு2030 இலக்கானது சமூகத்தை கட்டியெழுப்பும் முன்முயற்சியுடன் மிகவும் ஒத்துப்போகும். இந்தச் சங்கத்தின் உன்னத முயற்சிகளுக்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.
பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தமதுரையில் தெரிவித்தார்.
“அதுமட்டுமின்றி, உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் MICCI தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதையும் நான் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், பினாங்கு இந்தியர் வர்த்தகர் சங்கம் வருங்காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஊக்குவிக்கும் வகையில் ரிம60,000 மானியமாக வழங்கப்படும்”, என மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தமதுரையில் குறிப்பிட்டார்.
இதனிடையே, தீபாவளிப் பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியில் வரவேற்புரை வழங்கிய மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தகர் மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோ பார்த்திபன், மாநில அரசு இச்சங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவுக்கும் பங்களிப்பிற்கும் நன்றி நவிழ்ந்தார். மேலும், மித்ரா உதவித்தொகையுடன் மூலம் சிறுதொழில் மேற்கொள்ள உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் டத்தோ பார்த்திபன் தமதுரையில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்தியர் வர்த்தகர் மற்றும் தொழிலியல் சங்கத் தலைவர் டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், மலேசிய இந்திய காங்கிரஸ் பினாங்கு கிளைத் தலைவர் டத்தோ தினகரன், மலேசிய பினாங்கு இந்தியர் வர்த்தகர் மற்றும் தொழிலியல் சங்க உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.