பினாங்கு சட்டமன்ற கூட்டத்தில் TWOAS வெள்ளை அறிக்கை தாக்கல்

ஜார்ச்டவுன் – பெண்களுக்கானக் கூடுதல் இட ஒதுக்கீடு (TWOAS) முயற்சியின் ‘வெள்ளை அறிக்கை’ நவம்பர் 26ஆம் தேதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று இஸ்லாம் அல்லாத மத விவகாரங்கள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சோங் எங் கூறினார்.

“இந்த அறிக்கையானது, மாநில அரசியலமைப்பு மசோதா மற்றும் தொகுதி அல்லாத துணை உறுப்பினர்கள் மசோதாவை திருத்தம் செய்ய தாக்கல் செய்யப்படும். இது 2022 மாநில சட்டமன்றத்தின் முதல் காலக்கட்டத்தில், தொகுதி அல்லாத துணை உறுப்பினர்களின் (NCSM) பதவியை உருவாக்கம் செய்வதற்கான ஆயத்த நடவடிக்கையாகும்.

“மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பினாங்கில் உள்ள 40 மாநிலத் தொகுதிகளில் 12க்கும் குறைவான பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்த உறுப்பினர்கள் மறைமுகமாக நியமிக்கப்படுவார்கள்,” என்று சோங் எங் கொம்தாரில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு  கூறினார்.

மாநில சட்டமன்றத்தில் 30% பெண்கள் பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதிசெய்வதற்காக TWOAS முயற்சியை மாநில அரசு அறிமுகப்படுத்தியதாக பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் விவரித்தார்.

“உதாரணமாக, மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆறு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் ஒன்பது பெண்  சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

“அதுமட்டுமின்றி, மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெண் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், 30% இட ஒதுக்கீட்டை அடைய கூடுதலாக 18 பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

“இந்த அளவுகோல் 1995 பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் அல்லது 1995 பெய்ஜிங் நடவடிக்கை மையம் ஆகியவற்றிலிருந்து சர்வதேச சமூகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

“இன்றுவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15% மற்றும் மாநில சட்டமன்ற பிரதிநிதிகளில் 11% மட்டுமே பெண்கள் மட்டுமே உள்ளனர்.

“TWOAS அமலாக்கத்தின் மூலம், மலேசியாவில் குறைந்தபட்சம் 30% பெண்களின் பிரதிநிதித்துவத்தை அடையும் முதல் சட்டமன்றமாக பினாங்கு மாநில சட்டமன்றம்  இடம்பெறும். இது தென்கிழக்கு ஆசியாவில் திமோர்-லெஸ்டே மற்றும் வியட்நாம் நாடுகள் பட்டியலில்  மாநில அளவில்  அடையும் மூன்றாவது நாடாக மலேசியா திகழும்,” என சோங் எங் மேலும் கூறினார்.

சோங் எங்கின் கூற்றுப்படி இந்த TWOAS அமலாக்கம் சபா, திரங்கானு மற்றும் பஹாங் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டுள்ளது, விரைவில் மலாக்கா மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.

இருப்பினும், பிற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதும் பினாங்கு  மாநில அரசு முன்மொழிவது சற்று வேறுபட்டதாக அமைகிறது என்று அவர் கூறினார்.

“இது அரசாங்கத்தின் நிலையை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கை அல்ல. மாறாக, இது மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பகிரப்படும்.

“போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் NCSM-க்கு 18 தகுதியுடைய வேட்பாளர்களை பரிந்துரைக்க வேண்டும். மேலும் கட்சிகள் வென்ற இடங்கள் பட்டியல் அடிப்படையில் அவர்களின்  வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த இரண்டு அம்சங்களைத் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அதே அதிகாரத்தை NCSM உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று சோங் எங் கூறினார்.

“முதலாவதாக, அவர்களால் முதல்வர் பதவியையும் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியையும் வகிக்க முடியாது.

“இரண்டாவதாக, அவர்கள் தொடர்ந்து இரண்டு முறை NCSM ஆக பணியாற்ற முடியாது, இதனால் அதிகமான பெண்களுக்கு மாநில பிரதிநிதிகளாக ஆகுவதற்கு வாய்ப்பளிக்கின்றனர்.

“NCSM க்கு சிறப்புத் தொகுதி எதுவும் இல்லை, ஆனால் இம்மாநிலத்தில் எழும் பெண்கள்  சார்ந்த உரிமைகள், பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பிற பிரச்சனைகளில் குரல் கொடுத்து  சேவையாற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக TWOAS முயற்சியில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சியே இந்த வெள்ளை அறிக்கை என்றும் சோங் எங் கூறினார்

“கடந்த ஆண்டு முதல், TWOAS முன்முயற்சியில் மொத்தம் 21  அமர்வுகள் நடத்தப்பட்டன, இதன் மூலம் இந்த அமைப்பை மேம்படுத்த சில நுண்ணறிவு ஆலோசனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

“NCSM நியமனம் பெற ஆர்வமுள்ளவர்கள், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) ஏற்பாடு செய்துள்ள பாலின முன்னோக்கு பயிற்சி அமர்வில் பங்கேற்க வேண்டும்.

“அவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும், இது ஓர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் தகுதிகளில் ஒன்றாகும்.

“நவம்பர்,26 முதல் அவர்களது சுயவிவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழக தலைமை செயல் அதிகாரி ஓங் பீ லெங், நவ,26 முதல் பொதுமக்கள் பி.டபிள்யு.டி.சி அலுவலகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களின் அலுவலகங்களில் வெள்ளை அறிக்கையின் நகலைப் பெறலாம் அல்லது  அக்கழக ( https://pwdc.org.my/ ) அகப்பக்கத்திலும் பெறலாம், என்றார்.