பினாங்கு படகு சேவையை மீட்டுக்கொள்ள ஆர்வம் இல்லை – மாநில முதல்வர்

Admin

ஜார்ஜ்டவுன் – பினாங்கு மாநில அரசு பினாங்கு படகு சேவை செயல்பாட்டை எடுத்து வழிநடத்த இணக்கம் கொண்டிருக்கவில்லை என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிருபர்கள் இதன் தொடர்பாக மாநில அரசின் எண்ணம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் இவ்வாறு பதிலளித்தார்.

மாநில அரசு பினாங்கு படகு சேவையை நிர்வாகிக்க ஓர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது; அதில் பினாங்கு படகு சேவை ஓர் ஆண்டுக்கு ரிம10 லட்சம் முதல் ரிம15 லட்சம் வரை நஷ்டத்தை எதிர்நோக்குகின்றது; எனவே, இது தொடர்பாக மாநில அரசு இப்படகு சேவையின் நிர்வாகத்தை வழிநடத்தும் எண்ணத்தை கைவிட்டதாக தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் தெளிவுப்படுத்தினார்.

மேலும், பினாங்கு படகு சேவை பினாங்கின் துறைமுகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால், இப்படகு சேவையின் செயல்பாட்டை மீட்டுக்கொள்ள ஆய்வுகள் தொடரப்படாது என மாநில அரசு முடிவெடுத்துள்ளதையும்  முதல்வர் குறிப்பிட்டார் .

“பினாங்கு படகு சேவை பினாங்கு துறைமுக செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால், இது ஒரு இலாபகரமான வியாபாரமாக அமையும்”, என பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினருமான சாவ் கொன் யாவ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.  ஆட்சி மாற்றத்திற்கு முன்பு, முன்னால் முதலமைச்சர் லிம் குவான் எங் இப்படகு சேவையை மீட்டுக்கொண்டு வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், மலேசியா பிரசரனா நிறுவனம் ரெபிட் படகு சேவை தனியார் நிறுவனத்தை முறையாக வழிநடத்தவும் தொடர்ந்து அதன் சேவையை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் பிரசரனாவிற்கு கோரிக்கை விடுத்தார்.  பினாங்கு படகு சேவை நிதியம் மற்றும் சேவை தரத்தின் மூலம் மேன்மையடைவதை மாநில அரசு எதிர்ப்பார்ப்பதையும் மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் விவசாயம் & விவசாயம் சார்ந்த தொழில்துறை, கிராமப்புற மேம்பாடு மற்றும் சுகாதாரம் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அபீப் பஹாருடின் கலந்து கொண்டார்.