பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்த கூட்டரசு அரசாங்கத்திடம் நிதியுதவி விண்ணப்பம்- முதல்வர்

ஜார்ச்டவுன் மாநில அரசு பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டத்தை செயல்படுத்த கூட்டரசு அரசாங்கத்திடம் ரிம20பில்லியன் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் என அறிவிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற ஆட்சிக்குழு சந்திப்புக் கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலுடன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு நிதியுதவி கோரி அதிகாரப்பூர்வ கடிதம் எழுத முடிவெடுத்ததாக மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் தெரிவித்தார்.

விரைவு இரயில் சேவை (எல்.ஆர்.டி) மற்றும் தீவு இணைப்பு நெடுஞ்சாலை திட்டம் ஆகிய இரு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ள கூட்டரசு அரசாங்க நிதியுதவி கோருவதாக,” இன்று போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்முடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், எஸ்.ஆர்.எஸ் கொண்சொர்த்தியம் நிறுவன இயக்குநர் சீத்தோ வாய் லூங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கருத்துரைத்த முதல்வர், நிதி விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தென் பினாங்கு நில மீட்புத் திட்ட(பி.எஸ்.ஆர்) செயலாக்கம் குறித்து மறுபரிசீலனைச் செய்யப்படும், என்றார்.

தொடக்கத்தில் மாநில அரசு இத்திட்டம் செயல்படுத்த கூட்டரசு அரசாங்கத்திடம் இருந்து ரிம1பில்லியன் விண்ணப்பித்ததாகவும் இன்னும் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் கூறினார்.

இந்த பெருந்திட்டம் கூட்டரசு அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு ஒரு மத்திய அரசு திட்டமாக மாற்றப்பட்டால், மாநில அரசு நில மீட்புத் திட்டம் குறித்த தீவின் அளவு மற்றும் அதை செயல்படுத்தும் அளவு உள்ளிட்டவை மறு மதிப்பீடு செய்யப்படும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

முன்னதாகவே, டத்தோஸ்ரீ அன்வார், வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த தொழில்துறை துணை அமைச்சரும் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான சிம் சி சின், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா மற்றும் மாநில கட்சி தலைவர்களுடன் இணைந்து பி.எஸ்.ஆர் திட்டம் குறித்த மாநில முதல்வருடனான சிறப்பு கலந்திரையாடலில் ஏறக்குறைய 60 நிமிடங்களுக்கு கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய அன்வார், எஸ்.ஆர்.எஸ் நிறுவனத்தின் விளக்கமளிப்பில் திருப்தி கொள்வதாகக் கூறினார். இருப்பினும் இத்திட்டம் செயல்படுத்த் சில பிரதான கூறுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முதலாவதாக இந்த போக்குவரத்து பெருந்திட்டம் செயல்படுத்த நிதி நெருக்கடி ஏற்படுவதால் மாநில அரசு தென் பினாங்கில் மூன்று தீவுகள் மேம்படுத்த எண்ணம் கொள்வது பகுத்தறிவு மிக்க செயலாக கருதப்படுகிறது.

இருப்பினும், நில மீட்புத் திட்டம் செயல்படுத்துவதால் மீனவர்களின் சமூகநலன் பாதிக்கப்படாமல் கவனிப்பது அவசியம் எனவும் இத்திட்டம் செயல்படுத்துவதால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்தும் மாநில அரசு கலந்துரையாட விரும்புவதைப் பாராட்டுவதாகக் கூறினார்.

இத்திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட்டயீடு மட்டும் கொடுப்பதைத் தீர்வாகக் கொள்ளாமல் அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கும் தீர்வுக்காண வேண்டும் என குறிப்பிட்டார்.