ஜார்ச்டவுன் – பினாங்கு பாடாங் கோத்தா லாமாவில், போன் ஒடோரி விழா 2025 கடந்த ஜூலை,19 அன்று நடைபெற்று, ஒரு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கலுடன் நிறைவடைந்தது.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் எக்ஸ்பிளனேட் தளத்திற்கு வருகையளித்தனர். அங்கு பாரம்பரிய ஜப்பானிய நடனங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சுவையான ஜப்பானிய உணவு வகைகளுடன், விழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த பல அங்காடி கடைகளில் இருந்து பிரபலமான பினாங்கு உணவுகளையும் சுவைக்க முடிந்தது.
மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் வோன் வாய் கூறுகையில், இந்த விழா வெறும் இசை, உணவு அல்லது நிகழ்ச்சிகளைப் பற்றியது மட்டுமல்ல, பினாங்குக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாகும், என்றார்.
“இது கலாச்சாரத்தை ஒன்றிணைத்து, மரபுகள் கொண்டாடி மற்றும் பன்முகத்தன்மையை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக பறைச்சாற்றும் நகரமாக பினாங்கு திகழ்கின்றது.
“பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதிலும் இருந்து மக்கள், பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வரவேற்று வரும் ஓர் அனைத்துலக நகரமாக திகழ்வதில் பெருமைப்படுகிறோம்.
“ஜப்பானில் பிறந்து, பினாங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்துப் பின்னணியினராலும் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியமான இந்த வெளிப்படைத்தன்மையின் வெளிப்பாடே போன் ஒடோரி கொண்டாட்டமாகும்.
“30 ஆண்டுகளுக்கு முன்பு (1990 களில்) ஜப்பானிய சமூகத்தினரிடையே ஒரு சிறிய கலாச்சாரக் கூட்டமாக இங்கு தொடங்கியது. இப்போது ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது இப்போது ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானவர்களை இந்த வரலாற்று தளத்திற்கு ஈர்க்கிறது.
“போன் ஒடோரி பினாங்கின் நவீன கலாச்சாரக் கதையின் நீடித்த பகுதியாக மாறியுள்ளது,” என்று வோங் கூறினார்.
இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் ‘அகாரி போன் ஒடோரி’ அல்லது விளக்குகளின் திருவிழா என்று வோங் பகிர்ந்து கொண்டார். இது ஓர் உலகளாவிய செய்தியைக் கொண்டுள்ளது, அதாவது அரவணைப்பு, இணைப்பு மற்றும் சமூகத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
“இது நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும், ஒருவரையொருவர் பாராட்டவும், எல்லைகள் இல்லாத கலாச்சாரத்தின் செழுமையைக் கொண்டாடவும் ஒன்றிணையும் பல வழிகளைக் குறிக்கிறது.
“எங்களிடம் ஏற்கனவே உள்ள கலாச்சாரங்களை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள், சமூகங்கள் மற்றும் புதிய தலைமுறையுடன் தொடர்ந்து எதிரொலிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், பினாங்கில் உள்ள ஜப்பான் தூதர் ஷின்யா மச்சிடா, இந்தோனேசியாவின் தூதர் வான்டன் சரகிஹ் சிடாருக் மற்றும் பினாங்கு குளோபல் சுற்றுலாத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய் சோக் யான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.