பினாங்கு மாநில தமிழர் இளைஞர் மணி மன்றம் மரியாதை நிமித்தம் முதல்வர் அலுவகத்திற்கு வருகை .

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில இந்திய இளைஞர் மணி மன்றம் மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ் அலுவலகத்திற்கு இன்று மரியாதை நிமித்தம் வருகை மேற்கொண்டனர். அக்கழகத்தின் தலைவர் மணிகண்டன், துணை தலைவர் ஜெய்கிருஷ்ணா,செயலாளர் யுவராஜன், துணை செயலாளர் ஹாரிஸ் குமார், பொருளாளர் சங்கர் மற்றும் அக்கழக உறுப்பினர்களும் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.

1975-ஆம் ஆண்டு பினாங்கில் ஹசான் கனி என்பவரால் பினாங்கு தமிழர் இளைஞர் மணிமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மாநில இளைஞர்களை ஒன்றிணைத்து நாட்டின் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக அமையும் நோக்கில் இந்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடக்கத்தில், ஒரு கழகத்தில் சேர ஒரு இளைஞரின் வயது சராசரியாக 15 முதல் 40-ஆக முன்பு இருந்தது. கடந்த ஆண்டு மக்களவையில் இளைஞரின் வயது வரம்பு 30-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேவையில் ஈடுப்பட நினைக்கும் இளைஞர்களுக்கு பெரும் சவாலாக அமைவதாக அக்கழகத் தலைவர் மணிகண்டன் முதல்வரிடம் முறையிட்டார். இதன் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்திலும் பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ குறிப்பிட்டதை மாநில முதல்வர் குறிப்பிட்டார்.

வயது வரம்பு 30-ஆக குறைக்கப்படுவதால் அனைத்து கழகத்தின் நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் தடைச்செய்யும் என மாநில முதல்வர் சாவ் தெளிவுப்படுத்தினார்.

மேலும், பினாங்கு மாநில இந்திய இளைஞர் மணி மன்றம் இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் தவறான வழியில் செல்வதை தவிர்க்க தமிழர் திருநாள், மாணவர் வழிகாட்டி பட்டறை, இடைநிலைப்பள்ளிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு என இன்னும் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

தற்போது இத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி உதவி தேவைப்படும் வேளையில் மாநில முதல்வர் சாவ் கொன் யாவ் அதற்கான முறையான ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்க வலியுறுத்தினார். மாநில அரசு அதனை பரீசிலித்த பின்னர் இயன்ற உதவிகளை வழங்கவிருப்பதாக அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்தில் (பி.எஸ்.டி.சி) தேர்ச்சி குறைந்த மாணவர்கள் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கல்வியை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்தில் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

மேலும், பினாங்கு மேம்பாட்டுக் கழகம், பினாங்கு நீர் விநியோக வாரியம் மற்றும் அரசு சார்பு துறைகளில் இந்திய பணியாளர்கள் தத்தம் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதை முதல்வர் விளக்கமளித்தார்.

இதனிடையே, மாநில அரசு பினாங்கின் 28 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கடந்தாண்டு தொடங்கி ரிம 2கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.