பினாங்கு லிட்டல் இந்தியா மேம்படுத்தப்பட வேண்டும் – குமரேசன்

 

ஜார்ஜ்டவுன் – பினாங்கில் மிக பிரசித்தி பெற்ற இந்தியர்களின் வணிக தலமான லிட்டல் இந்தியாவை மேம்படுத்தப்பட வேண்டும். விழாக் காலங்களில் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலத்தில் அங்கு இந்தியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை நிலைநிறுத்தும் நோக்கில் வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்கள் பொருத்தப்பட வேண்டும் என இரண்டாம் தவணைக்கான பினாங்கு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமது தொகுப்புரையில் இவ்வாறு கோரிக்கை விடுத்தார் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன். இதன்மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு சிறந்த சுற்றுலா தலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 2008-ஆம் ஆண்டு தொடங்கி தனது சிறந்த நிர்வாகத்தால் இம்மாநில இந்தியர்களின் சமூகநலம், மாணவர்களுக்கு கல்வி உபகார சம்பளம், ஆலய மற்றும் இடுகாடு என இந்தியர்களின் நலனுக்காக செவ்வென சிறந்த சேவையாற்றுகிறது என  பாராட்டினார். அதேவேளையில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சுங்கை டுவாவில் அமைந்திருக்கும் ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்தை நிர்மாணிக்க மாற்று நிலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும், மாநில அரசின் தங்கத் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மூத்தக்குடிமக்களுக்கான தங்கத் திட்டம் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கொம்தார் மூன்றாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பத்து உபான் தொகுதியில் மட்டும் சுமார் 5,569 மூத்தக்குடிமக்கள் இந்த உதவித்தொகையை பெறுகின்றனர். மூத்தக்குடிமக்கள் நேரடியாக வருகையளித்து ஊக்கத்தொகையைப் பெற சிரமத்தை மேற்கொள்வதால் இந்த உதவித்தொகையை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தி விட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மாநில அரசு வங்கிகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ குமரேசனின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.

பினாங்கு மாநில அரசு இங்குள்ள வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்ள நிவாரணத் திட்டங்களை மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது மிடேன் ஹைட்ஸ், ஹலாமான் செந்தோசா, தாமான் சன்வேய் புக்கிட் கம்பீர் ஆகிய இடங்கள் வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்குகின்றன. இதன் தொடர்பாக தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான சாய்ரில் கீர் ஜொஹாரி அவர்களுக்கு குமரேசன் எழுதிய கடிதத்திற்கு
மாநில அரசு இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும் என பதில் கிடைக்கப்பெற்றுள்ளது என்றார். இந்த வெள்ள நிவாரணத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பத்து உபான் தொகுதியில் புட்சால் விளையாட்டு மைய நிர்மாணிப்புத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அவ்வட்டார இளைஞர்கள் சுகாதாரமான வாழ்க்கை முறையை அமல்படுத்தவும் நல்ல வழியில் நேரத்தை செலவிடவும் இயலும்.

தொடர்ந்து, இளம் விளையாட்டாளர்கள் எதிர்காலத்தில்  சிறந்த காற்பந்து வீரராக உருவாக்க பினாங்கு காற்பந்து சங்கம் அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

பினாங்கு மாநில அரசு ஓராண்டு காலமாக (14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்) தனது திறமையான நிர்வாகத்தை செயல்படுத்தி வருவதை பாராட்டினார். மேலும், அடிப்படை கழிவுகளில் இருந்து தனிமைப்படுத்தும் திட்டத்தின் மூலம் மறுசுழற்சி விகிதம் பினாங்கில் அதிகரித்துள்ளது. மேலும், இந்த விகிதத்தை அதிகரிக்க மறுசுழற்சி செய்யும் தரப்பினருக்கு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக் கொண்டார்.