பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் திட்டத்தில் மேலும் 21,000 சென்சார்கள் நிறுவப்படும் – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முழுவதும் பினாங்கு ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் (பி.எஸ்.பி) திட்டத்தில் வெற்றி பெற அடுத்த செப்டம்பர் வரை மேலும் 21,000 வாகன நிறுத்தும் ‘சென்சார்’ கருவிகள் பொருத்தப்படும்.

இந்த திட்டத்தின்  ஸ்மார்ட் முறையை செயல்படுத்தும் நிறுவனமாக ஹைடெக் பாடு பெர்ஹாட்  திகழ்கிறது. இதுவரை பினாங்கு மாநகர் கழக (எம்.பி.பி.பி) பகுதியில் 12,000 சென்சார்களும்  செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) பகுதியில் மேலும் 3,000 சென்சார் பொருத்தியுள்ளதாக வீட்டுவசதி, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

இந்த பி.எஸ்.பி திட்ட செயல்பாட்டில் சென்சார் கருவிகளை பராமரித்தல்; அறிவிப்பு பலகையை நிறுவுதல் மற்றும் மங்கலான சதுரங்களை சாயம் பூசுதல் ஆகியவை  மேற்கொள்ளப்படும்.

தற்போது, பி.எஸ்.பி செயலியின் புதிய பதிப்பில் ‘வாகனம் நிறுத்தும் இடத்தை அறிதல்’ எனும் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.

“பினாங்கு வாழ் மக்கள் நீண்ட நேரம் வாகன நிறுத்தும் இடத்தை தேடாமல் இச்செயலியின் துணையுடன் எளிதாக காலியான இடத்தை அறிவதே  இத்திட்டத்தின்  நோக்கமாக உள்ளது.

“எம்.பி.பி.பி பகுதியில் மொத்தம் 12,000 வாகன நிறுத்தும் இடங்கள் அரசிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், 24,000 வாகன நிறுத்தும் இடங்கள் எம்.பி.எஸ்.பி பகுதியில் உள்ளன,” என்று ஜெக்டிப்  லிட்டல் இந்தியாவில் இத்திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு விளக்கினார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கொம்தார் நாடாளுமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங்; எம்.பி.பி.பி செயலாளர் டத்தோ அட்னான் முகமட் ரோசாலி மற்றும் பலர்  கலந்து சிறப்பித்தனர்.

மேலும்,  மார்ச்,11 நிலவரப்படி இந்த செயலியை 562,423  பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பி.எஸ்.பி பயன்பாடு பொது மக்களிடையே அதிகமாக பயன்படுவதை அறிய முடிகிறது.

“தற்போது இச்செயலியை 151,374 பயனர்கள் பயன்படுத்துகின்றனர். மார்ச்,11 வரை இரண்டு ஊராட்சி மன்றங்களில் இந்த ஸ்மார்ட் வாகனம் நிறுத்தும் திட்டத்தின் மூலம்  ரிம 15,389,015.65 வசூலிக்கப்பட்டுள்ளது,” என ஜெக்டிப் விவரித்தார்.

பினாங்கு2030 இலக்குக்கு ஏற்ப
பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் விவேக  மாநிலமாக உருவாக்குவதற்கு இந்த ஸ்மார்ட் திட்டம் வழிவகுக்கும்.

மேலும், டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் பினாங்கு மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 வசதி குறைந்த ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு எடுத்து வழங்கினார்.