பூவை கிண்ண காற்பந்து போட்டி அறிமுக விழா

Admin

பிறை – காற்பந்து என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு என்ற காலம் மாறி தற்போது நம் இந்திய பெண்களும் இத்துறையில் பீடுநடைப் போடுவதை கண்கூடாக காண முடிகிறது. பினாங்கு மாநிலத்தில் காற்பந்து துறையில் வெற்றிநடைப்போடும் பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின்(PIFA) ஏற்பாட்டில் பூவை இந்தியப் பெண்கள் லீக் காற்பந்து போட்டியின் வெற்றிக் கிண்ண அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

“பினாங்கு மாநிலத்தில் PIFA தலைமைத்துவத்தின் கீழ் பெண்களுக்கான காற்பந்து போட்டிக்கான தடம் ஏற்பாடு செய்து, இன்று நாடு தழுவிய நிலையில் பெண்கள் தைரியமாக காற்பந்து போட்டியில் கலந்து கொள்ள முன் வருகின்றனர்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி

“இந்தியப் பெண்களுக்கென பிரத்தியேகமாக பூவை கிண்ணக் காற்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்தியப் பெண்கள் காற்பந்து துறையில் இணைவதற்கு இந்த பூவைக் கிண்ணப் போட்டி உந்துதலாக அமையும்,”. அதன் அறிமுக விழாவை தொடக்கி வைத்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இவ்வாறு கூறினார்.

மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத் தலைவரும் (MIFA), இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஸ்ரீ சங்கர்.

“மலேசிய காற்பந்து சங்கம் ஏற்பாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ‘துன் ஷாரிப்பா ரோஷியா’ கிண்ண காற்பந்து போட்டிக்கான விளையாட்டாளர்கள் தேர்வுச் செய்யும் களமாக இந்த பூவைக் கிண்ணப் போட்டி திகழ்கிறது,” என மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத் தலைவரும் (MIFA), இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஸ்ரீ சங்கர் கூறினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியப் பெண்களுக்கான ஃபுட்சல் போட்டியே இன்று தேசிய ரீதியில் பூவை கிண்ண காற்பந்து போட்டி நடத்த அடித்தளமாக அமைவதாக மேலும் கூறினார்.
இந்தப் போட்டிக்கான சுழற்கிண்ணம் பிரத்தியேகமாகவும் ஐந்து அடி உயரத்தில் தமிழ் நாட்டிலிருந்து வடிவமைக்கப்பட்டு மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டதாக, ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, காற்பந்து போட்டி பயிற்சிகளில் பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பங்கேற்கின்றனர். ஆதலால், இது போன்ற போட்டிகளை நடத்தி பெண்களின் இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் காற்பந்து துறையில் வளர்ச்சியை மேலோங்க செய்ய இச்சங்கம் பெரும் முயற்சி எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், வருகின்ற மார்ச்,25-ஆம் நாள் நட்பு ரீதியிலான காற்பந்து போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்ள பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்.

பெண்களும் காற்பந்து துறையில் சளைத்தவர்கள் அல்லர், இத்துறையிலும் சாதிக்க முடியும். எனவே, PIFA சங்கம் சில வருட காலமாக பெண்களுக்கான காற்பந்து போட்டிகளையும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்தச் சங்கத்தின் உதவியுடன் பல பெண்கள் நடுவர்களாகத் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

வருகின்ற மார்ச்,25 முதல் 27 ஆம் தேதி வரையில் பினாங்கு அறிவியல் பல்கலைகழகத்தில் நடைபெறும் காற்பந்து கிண்ணப் போட்டியின் சுழற்கிண்ணம் அறிமுக விழா சன் சேக தங்கு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் 6 மாநில காற்பந்து கிளாப்புகள் பங்குக் கொள்கின்றனர். அவை பினாங்கு இந்தியன் எப் சி(பினாங்கு), சொளதன் தைகர்ஸ் (ஜோகூர்), வொண்டர் கெல்ஸ் எப் சி (சிலாங்கூர்) ,கெ எல் சிட்டி கேல்ஸ் (கோலாலப்பூர்), என்.எஸ் மான் எப்.சி (நெகிரி செம்பிலான்), சில்வர் கேல்ஸ் எப்.சி (பேராக்) ஆகிய கிளாப்புகள் ஆகும் .
இந்த அறிமுக விழாவை முன்னிட்டு சங்கங்களின் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்துக் கொண்டனர் .