பொது மற்றும் தனியார் வீடமைப்புப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள மத்திய அரசிடம் ரிம134.76 மில்லியன் கோரிக்கை

Admin

பாயா தெருபோங் – பினாங்கு மாநில அரசு, இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்புப் பிரச்சனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி உரிய  உதவியை வழங்க வேண்டும் என்று வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

2022 ஆண்டுக்கான பினாங்கு பொது மற்றும் தனியார் வீடமைப்புத் திட்டங்களில்  பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்கானச் செலவினங்கள் ரிம134.76 மில்லியன் என  வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் (கே.பி.கே.தி) அமைச்சரிடம் தனது தரப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது என ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் கூறினார்.

“மத்திய அரசாங்கத்திடம் இருந்து பினாங்கு மாநிலத்திற்கு 2020-இல், ரிம32 மில்லியன் மற்றும் கடந்த ஆண்டு ரிம15 மில்லியன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றோம்.

“இந்த ஆண்டு, நாங்கள் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தின் மூலம் ரிம100 மில்லியனுக்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்துள்ளோம். மேலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் வீடமைப்புத் திட்டத்தின் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளோம்,” என்றார். இந்தப்  புதிய ஆண்டில் கே.பி.கே.தி உடனான ஒத்துழைப்புத் தொடரும் என்று ஜெக்டிப் நம்பிக்கை தெரிவித்தார்.

தாமான் லோன் பைன் அடுக்குமாடி குடியிருப்பில் 2021 நவம்பர் முதல் செயல்படத் தொடங்கிய இரண்டு மின் தூக்கிகளுக்கான  பராமரிப்புப் பணிக்கான அறிவிப்பை வழங்கியப் பின், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.

சுற்றுலா மற்றும் புத்தாக்க பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் இயோ சூன் ஹின்; புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர், ராம்கர்பால் சிங்; பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம், தலைமை இயக்க அதிகாரி (செயல்பாட்டுத் துறை), முகமது பைவ்சி முகமது யூசாஃப் மற்றும் லோன் பைன் அடுக்குமாடி குடியிருப்பின் பிரதிநிதி சோங் சூன் கெங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாநில அரசு  வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதைத் தவிர, தகுதியான வீடமைப்புத் திட்டங்களுக்கானப் பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடுகளும் கிடைப்பதையும்  எப்போதும் உறுதி செய்கிறது.

பட்டியலிடப்பட்ட 497 பராமரிப்புத் திட்டங்களும் இம்மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டங்களில் பெரும்பாலானவை மின்தூக்கிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை மாற்றுதல், புதுப்பித்தல் ஆகியவை அடங்கும்.

“தாமான் லோன் பைன் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மின்தூக்கி  மேம்படுத்துவதற்கானப் பராமரிப்புப் பணிகள் செயல்படுத்த ரிம118,400 நிதி செலவிடப்பட்டுள்ளது.

“தாமன் லோன் பைன் அடுக்குமாடி குடியிருப்புப் பராமரிப்புத் திட்டங்கள் மேற்கொள்ள மாநில அரசு மொத்த செலவில் 80 சதவிகிதம்
(ரிம94,720) நிதியளித்துள்ளது, மீதமுள்ள 20 சதவிகிதம் (ரிம23,680) குடியிருப்பு மேலாண்மைக் கழகம் மூலம் செலுத்தப்பட்டது,” என்று அவர் விளக்கமளித்தார்.

பினாங்கு மாநில அரசாங்கம் பொது மக்களின் நலனுக்காக நான்கு பராமரிப்பு நிதியம் வழங்குகின்றன. இதில், பொது வீடமைப்புத் திட்டங்கள்; பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் ஆகியவற்றின் கீழ் உள்ள வீட்டமைப்புத் திட்டங்கள்; தனியார் வீட்டமைப்புத் திட்டங்களுக்கான பினாங்கு அதிகபட்ச 80 சதவீத பராமரிப்பு நிதியமும் (TPM80PP) அடங்கும்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெக்டிப், இம்மாநிலத்தில் உள்ள அனைத்து கூட்டு மேலாண்மை அமைப்புகள் (ஜே.எம்.பி), குடியிருப்பு நிர்வாக வாரியம் (எம்.சி) மற்றும் கூட்டு மேலாண்மை வாரியம் (ஜே.எம்.சி) ஆகியவை  குடியிருப்பாளர்கள் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்துவதை உறுதிச் செய்ய வேண்டும்.  இந்நிதியின் மூலம் பராமரிப்புப் பணிகள், தூய்மையைப் பேணுதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்கு  முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய முடியும் என்று நினைவூட்டினார்.