மத்திய அரசு இதுவரை பினாங்கில் குறைவான பி.பி.ஆர் வீடுகளை மட்டுமே நிர்மாணித்துள்ளது.

Admin

 

ஜார்ச்டவுன் – மத்திய அரசு நாட்டில் மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் (பி.பி.ஆர்) கீழ் 114,652 வீடுகள் வழங்கியுள்ளன. இருப்பினும், பினாங்கு மாநிலத்தில் நான்கு பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ்  999 வீடுகள் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டன.

பினாங்கில் உள்ள இந்த பி.பி.ஆர் வீடுகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கிய பி.பி.ஆர் வீடுகளின் மொத்த எண்ணிக்கையில் 0.87 விழுக்காடு மட்டுமே இடம்பெறுகிறது.

பினாங்கு மாநில முதல்வர் மேதகு  சாவ் கொன் யாவ், பி.பி.ஆர் வீடுகளை குறைந்த வருமானம் உடையவர்களுக்கு
வழங்குவது மிக முக்கியம், என்றார்.

“குறைந்த வருமானப் பெறுநர்கள் தங்களுக்கென சொந்த வீடு வாங்குவதற்கு முன்பு பி.பி.ஆர் வீடுகள் சிறந்த வழியாக அமையும்.

“பினாங்கு அரசு இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 2019-ஆம் ஆண்டில் பி.பி.ஆர் வீடமைப்புத் திட்டம் அமைப்பதற்காக 72.3 ஏக்கர் தளங்களை கண்டறிந்து மத்திய அரசிடம் முன்மொழிந்தோம்,” என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சாவ் கூறினார்.

பினாங்கில் ஜெலுத்தோங் (வடகிழக்கு மாவட்டம்), ஜாலான் மாயாங் பாசிர் (தென்மேற்கு மாவட்டம்), உஜுங் பத்து (வட செபராங் பிறை), கம்போங் தொங்காங் (மத்திய செபராங் பிறை) மற்றும் பத்து காவான் (தென் செபராங் பிறை) ஆகிய இடங்கள் அடையாளங்காணப்பட்டதாக இதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டது.

மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதற்காக பினாங்கிற்கு பி.பி.ஆர் வீடுகளை வழங்க மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும் என்று மாநில முதல்வர் சாவ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வாண்டு வீடமைப்புப் பராமரிப்புத் திட்டம் (ரிம21,110,000) மற்றும் மலேசிய வீட்டுப் பராமரிப்பு நிதியம் (ரிம65,830,100) ஆகியவற்றின்  ஒதுக்கீடு தொடர்பாக மாநிலத்தின் விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“மத்திய அரசு 2021 வரவு செலவு திட்டத்தின்  கீழ் குறைந்த வருமானம் பெறுநர்களுக்கு வசதியான மற்றும் தரமான வீடுகளை வழங்க ரிம1.2 பில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்நிதி ஒதுக்கீட்டிலிருந்து, குறைந்த விலை மற்றும் குறைந்த நடுத்தர விலை அடுக்குமாடி வீடுகளை பராமரிப்பதற்காக ரிம125 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

பினாங்கு வீடமைப்பு வாரியத்தின் கீழ், மாநில வீடமைப்புத் துறை மற்றும் மாநில செயலாளர் அலுவலகத்தின் வீடமைப்புத் தொடர்பானப் பணிகளை மாநில வீடமைப்பு வாரியம் இனி தொடரும் என்று சாவ் கூறினார்.

“இத்திட்டத்தின் கீழ் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் மற்றும் வாடகை கொள்முதல் திட்டம் மூலம் வீடுகளை வழங்குதல்; அரசு வீடுகள் மற்றும் பி.பி.ஆர் வீடுகளின் வாடகை, அத்துடன் பொது வீடுகள் மற்றும் தகுதியான தனியார் வீட்டமைப்புத் திட்டங்களின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு ஆகியவை இவ்வாரியத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

பினாங்கு உள்ளூராட்சி, வீடமைப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், பினாங்கு வீடமைப்பு வாரியம் மாநில அரசின் நகர்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வீட்டுவசதி வளங்களைப் பாதுகாப்பதற்கும் (குறிப்பாக வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள்) வழங்குவதற்கு உதவும் என விவரித்தார் .

பினாங்கு மாநிலத்திற்கு பி.பி.ஆர் வீடுகள் வழங்குவதை அரசியல்மயமாக்க வேண்டாம் என்று அவர் மத்திய அரசிற்கு வலியுறுத்தினார்.

“பொது மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்க பினாங்கு மாநில அரசு தொடர்ந்து உதவும்,” என்றார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு வீடமைப்பு வாரியத்தின் குழு உறுப்பினர் டத்தோ தோ சின் லியோங், அதன் பொது மேலாளர் அய்நூல் படிலா சம்சுடி மற்றும் வாரியத்தின் தலைமை வணிக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.