“நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” என மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஸி சென், 2025 உலக மனநல தினத்தையொட்டி உறுதியளித்தார்.
லிவர்பூல் எஸ்.சி.யின் குறிக்கோளிலிருந்து உத்வேகம் பெற்று, உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுடனான (NGO) கூட்டாண்மைகள் மூலம் இந்த ஆண்டின் கருப்பொருளான “சேவைகளுக்கான அணுகல்: பாதிப்புகள் மற்றும் அவசரநிலைகளில் மனநலம்” என்பதை முன்னெடுத்துச் செல்வதிலும், நெருக்கடிகளின் போது மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சென்றடைவதையும் உறுதி செய்வதிலும் முன்னுரிமை அளிப்பதாக கூய் கூறினார்.
மேலும், மனநல பிரச்சனையில் பாதிக்கப்படும் தனிநபர், இம்மாநிலத்தில் செயல்படும் மனநல சேவை வழங்கும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு கூய் ஊக்குவித்தார்.
“நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள். கவலைப்பட வேண்டாம். எங்களைத் தொடர்பு கொள்ள வெட்கப்படவும் வேண்டாம். உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்படும்,” என்று கூய் அண்மையில் கொம்தார், முத்துச் செய்திகள் நாளிதழ் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு பிரத்யேக நேர்காணலின் போது இவ்வாறு கூறினார்.
அதுமட்டுமின்றி, நம்பிக்கையின்மை காரணமாக பெரும்பாண்மை மாணவர்கள் பள்ளி கவுன்சிலர்களை அணுக விரும்புவதில்லை என்று கூய் குறிப்பிட்டார்.
“மாணவர்களுக்கும் ஆலோசகர்களுக்கும் இடையே விவாதிக்கப்படும் சில பிரச்சனைகள் இறுதியில் பள்ளியில் அனைவருக்கும் தெரியவருவதால் இச்சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, ரகசியத்தன்மைக்கு மிகுந்த நற்பெயரைக் கொண்ட பெஃப்ரெண்டர்ஸ் போன்ற அரசு சாரா நிறுவனங்களை அணுகுவதில் அவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். பெஃப்ரெண்டர்ஸிடம் புகாரளிக்கப்பட்ட வழக்குகள் சமூகத்தில் விவாதிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் கேள்விப்படுவதில்லை,” என்று அவர் விளக்கமளித்தார்.
நான்கு இளைஞர்களில் ஒருவர் மனநலப் பிரச்சனைகளை அனுபவித்ததாகவும், பினாங்கு இளைஞர்களில் 24.5 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2022 மலேசிய தேசிய இளைஞர் கணக்கெடுப்பு வழி அறியப்படுகிறது.
மனநலப் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள், குறிப்பாக பினாங்கு இளைஞர் மேம்பாட்டுக் கழகம் (PYDC), பிஃப்ரென்டர்ஸ் பினாங்கு, சினேகம், பினாங்கு இளைஞர் மன்றம் மற்றும் பினாங்கு மனநலச் சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் உதவி பெறுமாறு கூய் வலியுறுத்தினார்.
“மனநல பாதிப்புக்கு உட்பட்டவர்கள் உதவிக் கோருவதற்கு செயலிகள் போன்ற இலகுவான வழிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பைச் செய்வதில் அவர்களுக்குச் சங்கடமாக இருந்தால், அவர்கள் பெஃப்ரென்டர் புலனம் வாயிலாக தொடர்புக்கொள்ளலாம், ஏனெனில் அவர்களின் பெற்றோர் கேட்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில், அவர்களின் பெற்றோரே மன அழுத்தத்திற்கான காரணமாக இருக்கக்கூடும்,” என்று கூய் மேலும் கூறினார்.
மனநலம் சார்ந்த பிரச்சனைகளைக் களைவது குறித்து தனது குழுவிற்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் இடையே விவாதங்கள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
இளைஞர், விளையாட்டு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினராக பதவியேற்றபோது, மனநலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து அரசு சாரா நிறுவனங்களையும் ஒன்றிணைக்க ஒரு சுகாதார துணைக்குழுவை நிறுவியதாக கூய் கூறினார்.
“காவல்துறை மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு பிரிவுகள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் பினாங்கு சுகாதாரத் துறை செயலகமாகச் செயல்படுவதன் மூலம் நாங்கள் ஒன்றிணைக்கிறோம். பினாங்கில் உள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதும், சமூகத்தில் அதிகமான மக்களைச் சென்றடைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் எங்கள் குறிக்கோள் ஆகும்,” என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சின் கீழ், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முன்முயற்சி திட்டங்கள் மூலம் மனநல கல்வியறிவு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கவும், தாக்கத்தைக் குறைக்கவும் தேசிய மனநல சிறப்பு மையம் (NCEMH) 2022,அக்டோபரில் தொடங்கப்பட்டது என்று கூய் விளக்கமளித்தார்.
கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தால் அதிகரித்து வந்த மனநல சவால்களுக்குப் பதிலளிக்கும் விதமாக NCEMH நிறுவப்பட்டது என்று அவர் கூறினார். பொது, தனியார் மற்றும் அரசு சாரா துறைகளில் மனநல சேவைகளை ஒருங்கிணைக்க இது ஒரு மத்திய மையமாக செயல்படுகிறது.
கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சமூக தலைவர்களுக்கு பயிற்சி அளித்து, குழந்தைகளின் மனநலத்திற்கு சமூக ஆதரவை மேம்படுத்த சுகாதார அமைச்சு “K- Mindset” (Community Minda Sejahtera) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்று கூய் தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் தொடர்ந்து மனநலப் பிரச்சனைகளை நிவர்த்திச் செய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காகக் கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டு உலக மனநல தினத்தை அனுசரிக்கும் வகையில், அக்டோபர்,26 ஆம் தேதி பாலிக் புலாவில் உள்ள கிளினிக் ஆயிர் புத்தேவில் மாநில அளவிலான கொண்டாட்டம் நடைபெறும் என அறியப்படுகிறது.
இந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 4–6, 7–9, 10–12 வயதுடைய குழந்தைகள் மற்றும் 55 வயதுடைய மூத்த குடிமக்களுக்கான கம்போங் ஃபன் ரன்/ரைடு V.4; பல்லாங்குழி போட்டி, ஆரோக்கியமான செய்முறைப் போட்டி, மனநலம் குறித்த டிஜிட்டல் சுவரொட்டிப் போட்டி மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.
மேலும், டி’ஹோம் மனநல சங்கம், பினாங்கு மருத்துவமனையுடன் இணைந்து, அக்டோபர் 10 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, ப்வஸ்ட் அவென்யூ பேரங்காடியில் மனநலப் பிரச்சனைகள் குறித்த உரை மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும், அதே நேரத்தில் பிஃப்ரெண்ட்டர்ஸ் பினாங்கு, அக்டோபர் 12 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை யூ.எஸ்.எம் பல்கலைக்கழகத்தில் “மனநல விவகாரம்” என்ற தலைப்பில் ஒரு உரையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.